பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள வாடிக்கையாளர் சேவை நிர்வாகி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான இந்த அறிவிப்பின் மூலம் நாடு முழுவதும் மொத்தம் 10,277 காலிப்பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 894 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
வயது வரம்பு: விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் ஆகஸ்ட் 1, 2025-இல் 20 வயது நிரம்பியவராகவும், 28 வயதிற்குள் இருப்பவராகவும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி ஒதுக்கீட்டு பிரிவுகளுக்கு வயது தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் கணினி அறிவு அவசியம். தமிழ்நாட்டில் பணியாற்றுவதற்கு தமிழ் மொழி அறிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரம்: பணியமர்த்தப்படும் நபர்களுக்கு மாதம் ₹24,050 முதல் ₹64,480 வரை ஊதியம் பெறுவார்கள்.
தேர்வு முறைகள்: வங்கியில் உள்ள பணிக்கு முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு என 2 கட்ட தேர்வு நடத்தப்படும். இதில் முதல்நிலைத் தேர்வு தகுதித்தேர்வாகும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் முதன்மைத் தேர்வை எழுத வேண்டும். முதல்நிலைத் தேர்வு மொத்தம் 100 கேள்விகள் கொண்டு 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.
முதன்மைத் தேர்வு 155 கேள்விகள் கொண்டு 200 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். கட்-ஆஃப் மதிப்பெண்கள் அடிப்படையில் இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு உள்ளூர் மொழி தேர்வு நடத்தப்படும். அதில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் வங்கி வாரியாக இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். அதனைத்தொடர்ந்து, அந்தந்த வங்கிகளின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு பணி நியமனம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க https://www.ibps.in/ என்ற இணையதளத்தைப் பார்வையிட வேண்டும். கட்டணம் செலுத்திய பிறகே விண்ணப்பம் முழுமை பெறும். விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 28, 2025 ஆகும்.
Read more: கூமாப்பட்டிக்கு அடித்தது ஜாக்பாட்.. தமிழக அரசு அறிவித்த பலே அறிவிப்பு.. என்னென்ன தெரியுமா..?