தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் இப்போதே பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர்.. அந்த வகையில் 2026-ல் முதன்முறையாக தேர்தலை சந்திக்க உள்ள தவெகவும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.. தவெக தலைவர் விஜய் கடந்த வாரம் திருச்சியில் தனது பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.. தொடர்ந்து அவர் அரியலூரிலும் பிரச்சாரம் மேற்கொண்டார்..
இந்த நிலையில் அவர் இன்று நாகை, திருவாரூரில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.. இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்ற விஜய், திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக நாகை சென்றார்.. தனது பிரச்சார வாகனத்தில் சென்ற விஜய்க்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நாகை மாவட்டம் புத்தூர் ரவுண்டானா பகுதியில் உள்ள அண்ணாசிலை சந்திப்பில் தொண்டர்களுக்கு மத்தியில் தவெக தலைவர் விஜய் இன்று காலை 11 மணிக்கு உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டது.. எனினும் திட்டமிட்ட படி விஜய்யால் பிரச்சார இடத்திற்கு வர முடியவில்லை.. அதன்படி சுமார் 1.35 மணியளவில் விஜய் புத்தூர் பகுதிக்கு சென்றார்.. அங்கு கூடியிருந்த தவெக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார்..
அப்போது பேசிய அவர் “ எல்லோருக்கும் வணக்கம்.. எல்லாரும் எப்படி இருக்கீங்க? சாப்டீங்களா? என்று விசாரித்து விட்டு பேசத் தொடங்கினார்.. அப்போது” அண்ணா, பெரியார் அவர்களுக்கு வணக்கம்.. நாகூர் ஆண்டவர் அன்போடு, நெல்லுக்கை மாரியம்மன், அன்னை வேளாங்கன்னி ஆசியுடன், நாகப்பட்டினம் மண்ணில் இருந்து பேசிக் கொண்டு இருக்கிறேன்.. என்றைக்குமே மீனவ நண்பனா இருக்கும் விஜய் உடன் அன்பு வணக்கங்கள்..
மத வேறுபாடு இல்லாத ஊர் நாகப்பட்டினம்.. மீன் ஏற்றுமதியில் 2-வது இடத்தில் இருப்பது நாகை துறைமுகம் தான்.. இங்கு நவீன வசதிகள் கொண்ட மீன் பதப்படுத்தும் ஆலை இல்லை.. அடுக்கு மொழியில் பேசி பேசி, காதில் இருந்து ரத்தம் வந்தது தான் மிச்சம்.. இவர்கள் ஆட்சியில் மக்கள் தவியாக தவிக்கின்றனர்..
இலங்கை கடற்படையால், மீனவர்கள் தாக்கப்படுறது குறித்தும் மதுரை மாநாட்டில் நான் பேசியிருந்தேன்.. நான் என்ன இன்று நேற்றா மீனவர்களுக்காக குரல் கொடுத்து வருகிறேன்.. இதே நாகையில் 2011-ல் மீனவர்கள் தாக்கப்பட்டது கண்டித்து பொதுக்கூட்டம் நடத்தினோம்.. விஜய் களத்திற்கு வருவது ஒன்று புதிதல்ல.. எப்பவோ வந்தாச்சு.. அன்றும் இன்றும் என்றும் மக்களுக்காக மக்களுடன் நிற்பது நாம் தான்..
ஈழ தமிழர்கள் உலகில் எங்கு இருந்தாலும் தலைவனை இழந்து தவிக்கும் அவர்களுக்காக நாம் நிற்பது நம் கடமை.. மீனவர்களின் பிரச்சனைக்காக கடிதம் எழுதி விட்டு கப்சீப் என்று அடங்கி இருக்க நாம் ஒன்று கபட நாடக அரசும் கிடையாது.. மற்ற மீனவர்கள் இந்திய மீனவர்கள், நம்ம மீனவர்கள் என்றால் தமிழக மீனவர்கள் என்று பிரித்து பேச நாம் ஒன்னும் பாசிச பாஜக அரசும் கிடையாது.. நிரந்தர தீர்வு தான் நம் முக்கிய திட்டம்” என்று தெரிவித்தார்..
தொடர்ந்து பேசிய அவர் “ நாகை மக்களுக்கு காவிரி நீரை கொண்டு வந்தார்களா? கடல் சார்ந்த இந்த ஊரில் அரசு மரைன் கல்லூரியை கொண்டு வரலாம் கொண்டு வந்தார்களா? இங்கு மீன் சார்ந்த எந்த தொழிற்சாலையும் அமைத்தார்களா? குறைந்தபட்சம் நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் தொழில் வளத்தை பெருக்கினார்களா?
ஆனால் ஒவ்வொரு முறையும் வெளிநாட்டிற்கு டூர் போயிட்டு வரும் போதெல்லாம் அத்தனை கோடி முதலீடு, இத்தனை கோடி முதலீடு என்று சிஎம் சார் சிரித்துக் கொண்டே சொல்வார்.. சி.எம் சார் மனச தொட்டு சொல்லுங்க.. வெளிநாட்டு முதலீடா, வெளிநாட்டில் முதலீடா? ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் முதலீடா? உங்க குடும்ப முதலீடு வெளிநாட்டிற்கு போகுதா?” என்று கேள்வி எழுப்பினார்..