தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் திமுக தரப்பில் தொகுதிப் பங்கீடு தொடர்பான காய்நகர்த்தல்கள் தற்போதே தீவிரமடைந்துள்ளன. இந்த முறை கூட்டணிக் கட்சிகளின் தயவை விட, சொந்த பலத்தை நிரூபிப்பதில் திமுக தலைமை உறுதியாக இருப்பதை அறிவாலய வட்டார தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
முன்னெப்போதும் இல்லாத வகையில், சுமார் 165 தொகுதிகளில் திமுக நேரடியாக களமிறங்கி, அறுதிப் பெரும்பான்மையைத் தனித்து ஈட்டுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியூகம் வகுத்து வருகிறார். தேமுதிகவின் வருகையால் கூட்டணியில் புதிய சமன்பாடுகள் உருவாகியுள்ள நிலையில், அதிக இடங்களை கேட்டு வரும் காங்கிரஸை மென்மையாக கையாண்டு வருகிறது திமுக தலைமை.
காங்கிரஸ் கட்சி 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கோரிய போதிலும், திமுக தரப்பில் 25 இடங்கள் மட்டுமே இறுதிக்கட்ட முடிவாக இருக்கும் என தெரிகிறது. அதேபோல், விசிகவுக்கு 7 இடங்களும், புதிதாக கூட்டணியில் இணைந்த தேமுதிகவுக்கு 7 இடங்களுடன் ஒரு மாநிலங்களவை சீட்டும் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இடதுசாரி கட்சிகளான சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகியவற்றிற்குத் தலா 6 இடங்களை ஒதுக்கி, கூட்டணியின் சமநிலையைப் பேண திமுக திட்டமிட்டுள்ளது.
மதிமுகவுக்கு 5 இடங்களும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு 4 இடங்களும் ஒதுக்கப்படலாம் என கூறப்படுகிறது. சிறுபான்மை வாக்கு வங்கியை உறுதி செய்ய மமக மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளுக்குத் தலா 3 இடங்களும், கொமதேகவுக்கு 2 இடங்களும், எஸ்டிபிஐ-க்கு 1 இடமும் வழங்கப்படலாம். இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி மற்றும் சு.க.முருகவேல் ராஜன் போன்ற பல்வேறு சமூக அமைப்புகளின் தலைவர்களை உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வைக்க திமுக அழுத்தம் கொடுத்து வருகிறது.
சிறிய கட்சிகளை தனிச் சின்னத்தில் போட்டியிட விடுவதால் வாக்குகள் சிதறும் அபாயம் இருப்பதை உணர்ந்த திமுக மேலிடம், அவர்களை உதயசூரியன் சின்னத்தின் கீழ் கொண்டு வர முயற்சித்து வருகிறது. இதன் மூலம் 165-க்கும் மேற்பட்ட இடங்களில் உதயசூரியன் சின்னம் மின்னும் நிலையை உருவாக்கி, தேர்தலுக்குப் பிந்தைய பேரம் பேசும் வலிமையை தக்கவைத்துக் கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அதிரடித் தொகுதிப் பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தேர்தல் அறிக்கையோடு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



