நாட்டின் பொதுப் போக்குவரத்து வரலாற்றில் ஒரு மைல்கல்லாக, ‘சென்னை ஒன்’ என்ற ஸ்மார்ட்ஃபோன் செயலியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்த உள்ளார். சென்னையின் பல்வேறு போக்குவரத்து சேவைகளை ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் இந்த புதுமையான செயலியை, சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் வடிவமைத்துள்ளது.
இந்த செயலியின் அறிமுகம், CUMTA-வின் இரண்டாவது ஆணையக் கூட்டத்தில் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில், முதல்வர் இந்த செயலியைத் தொடங்கி வைப்பதோடு, அடுத்த 25 ஆண்டுகளுக்கான விரிவான போக்குவரத்துத் திட்டத்திற்கும் ஒப்புதல் அளிப்பார் என்று கூறப்படுகிறது. இந்த புதிய திட்டம் சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதோடு, நிலையான சுற்றுச்சூழல் நட்பு போக்குவரத்தை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘சென்னை ஒன்’ செயலியின் மிகப்பெரிய சிறப்பு, அனைத்து போக்குவரத்து சேவைகளுக்கும் ஒரே QR குறியீடு கொண்ட டிக்கெட்டை பயன்படுத்தும் வசதிதான். அதாவது, பயணிகள் இனி மெட்ரோ ரயில், மாநகரப் பேருந்துகள் (MTC), நம்ம யாத்ரி ஆட்டோக்கள் மற்றும் வாடகை வாகனங்கள் என அனைத்திற்கும் ஒரே டிக்கெட்டில் பயணிக்கலாம்.
மேலும், இந்த செயலியில் டிக்கெட்டுகளை யுபிஐ கட்டணங்கள் மூலம் எளிதாக வாங்க முடியும். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் இயங்கும் இந்த செயலி, டிக்கெட் வாங்க வரிசையில் காத்திருக்கும் சிரமத்தை கணிசமாக குறைக்கும்.
முதற்கட்டமாக மெட்ரோ, எம்.டி.சி. பேருந்துகள், நம்ம யாத்ரி ஆட்டோக்கள், வாடகை வாகனங்கள் ஆகியவற்றை இந்த செயலி ஒருங்கிணைக்கும். பின்னர், புறநகர் ரயில்கள் மற்றும் எம்.ஆர்.டி.எஸ். சேவைகளும் இதில் இணைக்கப்படும். இதன் மூலம், அனைத்துப் போக்குவரத்து சேவைகளையும் ஒரே தளத்தில் வழங்கும் இந்தியாவின் முதல் நகரமாக சென்னை திகழும்.



