கோவையில் 1998 ல் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய டெய்லர் ராஜா என்பவரை சத்தீஸ்கரில் தீவிரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கோவையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது, அல்-உம்மா பயங்கரவாத அமைப்பு மேற்கொண்ட தொடர் குண்டுவெடிப்புகள் தமிழகத்தையே அதிரவைத்தன. 11 இடங்களில் வெடித்த 12 குண்டுகளில் 58 பேர் உயிரிழந்தனர், மேலும் 2,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இது தமிழகத்தின் வரலாற்றிலேயே மிக மோசமான பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், 28 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி சாதிக் என்கிற டெய்லர் ராஜா சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூரில் இருந்து தமிழக போலீசாரால் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து அவரை கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடந்து வருகிறது.
டெய்லர் ராஜா குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபடுவதற்கு முன்பு தையல் மற்றும் எம்பிராய்டரி செய்து வந்தார். இவர் 1996ஆம் ஆண்டு நாகூரில் ஒரு கொலை வழக்கில் தொடர்புடையவர். மேலும் 1996- 97ஆம் ஆண்டு கோவை மாநகரில் உள்ள ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திலும், மதுரை கரிமேடு காவல் நிலையத்திலும் இரண்டு கொலை வழக்குகளிலும் சிக்கினார்.
1997ல், டெய்லர் ராஜா, அல்-உம்மாவின் கூட்டாளிகளுடன், கோவை நகரிலிருந்து மோட்டார் சைக்கிளில் மதுரைக்கு வந்து, மதுரை மத்திய சிறையின் உதவி ஜெயிலர் ஜெயபிரகாஷைக் கொலை செய்தார். 1998-ல் கோவையில் வள்ளல் நகர் பகுதியில் வீடு எடுத்து வெடிகுண்டுகள் தயாரித்து பதுக்கினார். 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 12, 13, 14 ஆகிய நாட்களில் அல்-உம்மா குழுவிற்கு வெடிகுண்டுகள் விநியோகித்ததாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
Read more: தயிரில் உப்பு சேர்த்து சாப்பிடணுமா? இல்ல சர்க்கரையா? எது நல்லது? நிபுணர் பதில்..