கோவை விமான நிலையம் அருகே நேற்றிரவு தனது ஆண் நண்பருடன் காரில் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. ஆண் நண்பரை தாக்கிவிட்டு மாணவியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய 3 இளைஞர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், நேற்று நள்ளிரவில் அந்த 3 பேரை போலீசார் சுட்டுப் பிடித்தனர். துடியலூர் அருகே போலீசாரை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயற்சி, தப்ப முயன்ற போது, போலீசார் காலில் சுட்டுப் பிடித்தனர். காலில் குண்டு அடிபட்ட 3 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தரப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது; இத்தகைய கொடூர குற்றச் செயல்களைக் கண்டிக்க எந்தக் கடுஞ்சொல்லும் போதாது. இதில் ஈடுபட்ட குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை விரைந்து பெற்றுத் தர, காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும் மேலும் நம் மகளிர் அனைத்துத் துறைகளிலும் அடையும் முன்னேற்றம்தான் இத்தகைய வக்கிர மிருகங்களின் ஆணாதிக்க மனநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்; முழுமையான முற்போக்குச் சமூகமாக நாம் மாறுவதற்கு வழிவகுக்கும்!” என்று பதிவிட்டுள்ளார்..



