தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகேயுள்ள சின்னமனை பகுதியைச் சேர்ந்த விஷ்ணு (20), மதுரை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில், தீபாவளி விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில், நேற்று காலை மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த சேதுபாவாசத்திரம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், விஷ்ணுவின் சடலத்திற்கு அருகில் இருந்த ஒரு மரக்கிளையின் இலையில், “என் சாவுக்கு பாபு தான் காரணம்” என்று பேனாவால் எழுதப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் அந்த பாபு யார் என விசாரணையில் இறங்கினர். அப்போது, தற்கொலை நடந்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி வரும் பாபு (40) என்பவர்தான் அவர் என்றும், அவர் மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. பாபுவிடம் விசாரணை மேற்கொண்டபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
ஆசிரியர் பாபு, பள்ளியின் முன்னாள் மாணவர் என்ற முறையில் விஷ்ணுவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால், கடந்த 3 மாதங்களாக விஷ்ணு, விடுமுறைக்கு ஊருக்கு வரும்போதெல்லாம் ஆசிரியர் பாபுவுக்கு தொடர்ந்து போன் செய்து, ஓரினச் சேர்க்கை தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
மாணவனின் எதிர்காலத்தைக் கருதி, முதலில் இதைப் பெரிதுபடுத்தாத ஆசிரியர் பாபுவுக்கு, விஷ்ணுவின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஆசிரியர், இந்த விவகாரம் குறித்து விஷ்ணுவின் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், விஷ்ணுவைக் கண்டித்ததுடன், இனி தொந்தரவு வராது என்றும் ஆசிரியரிடம் உறுதி அளித்துள்ளனர்.
இந்நிலையில், தீபாவளி முடிந்து கல்லூரிக்கு திரும்புவதற்காக விஷ்ணு கிளம்பும்போது, அவரது அண்ணன் ஆசிரியர் பாபுவுக்கு அறிவுரை கூறி சென்றதாகவும் தெரிகிறது. இதனால் எரிச்சலும் கோபமும் அடைந்த விஷ்ணு, தன்னைப் பற்றி வீட்டில் போட்டுக் கொடுத்ததற்கு காரணம் பாபுதான் என்று நினைத்துள்ளார்.
இதன் விளைவாக, ஆசிரியர் பாபுவுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே, அவரது பெயரை எழுதி வைத்துவிட்டு, அவர் பணிபுரியும் பள்ளி வளாகத்திலேயே விஷ்ணு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பொதுவாக, ஆசிரியர்களால் மாணவர்களுக்கு ஏற்படும் தொல்லைகள் குறித்து செய்திகள் வரும் நிலையில், ஆசிரியரையே மாணவன் டார்ச்சர் செய்த இந்தச் சம்பவம் தஞ்சாவூர் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



