எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று கோவையில் மக்களிடையே உரையாற்றிய அவர் “ அறநிலையத்துறையின் நிதியை எடுத்து கல்லூரியை கட்டுவது எந்த விதத்தில் நியாயம்.. அந்த பணம் இவர்களை உறுத்துகிறது.. கோயில் கட்டுவதற்காக உண்டியலில் பணம் போடுகிறீர்கள்.. அது அறநிலையத் துறையில் சேர்கிறது. அந்த பணத்தை எடுத்து கல்லூரி கட்டுகிறார்கள்..
ஏன் அரசு பணத்தில் கட்டினால் ஆகாதா? அதிமுக ஆட்சியில் அரசு பணத்தில் புதிய கல்லூரிகளை கட்டினோம்.. ஆனால் இவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு அறநிலையத்துறை நிதியை எடுத்து செலவழிப்பது எந்த விதத்தில் நியாயம்? மக்கள் இதனை சதிச்செயலாக பார்க்கின்றனர்” என்று தெரிவித்தார்.
கோயில் வருமானத்தில் திமுக அரசு கல்லூரிகளை கட்டுவது நியாயமா என எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார். அவரின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை கொளத்தூரில் அமைந்துள்ள சென்னை கபாலீஸ்வரர் கோயில் கல்லூரியில் மாணவர்களும் பெற்றோர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்து உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினர்..
குற்றமில்லை.. குற்றமில்லை, கோயில்கள் மூலம் வருகின்ற மக்கள் காணிக்கை பணத்தினை யாராலும் அழிக்க முடியாத கல்வி செல்வத்தை வழங்குவது குற்றம் இல்லை.. குற்றம் இல்லை.” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் வைத்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.