சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தன்னை ஒரு வழக்கறிஞர் என அடையாளத்துடன் அறிமுகப்படுத்திக் கொண்ட பூசாரிப்பட்டியை சேர்ந்த அலமேலு (25) என்ற பெண், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து முக்கியப் புள்ளிகளை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிப் பணம் பறித்த விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அரசு அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த திட்டமிட்ட வேட்டையில், இதுவரை 13 பேர் சிக்கியுள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த மோசடி கும்பலின் பின்னணியில் ஜனார்த்தனன், ஜனஅம்சபிரியன் ஆகிய இரு சகோதரர்கள் முக்கிய மூளையாக செயல்பட்டுள்ளனர். அலமேலுவின் கள்ளமில்லாத பேச்சையும் அழகையும் பயன்படுத்தி, செல்வாக்கு மிக்க நபர்களின் தொலைபேசி எண்களை சேகரித்து அவர்களை வலையில் வீழ்த்துவதே இவர்களின் முதல் கட்ட நடவடிக்கையாக இருந்துள்ளது.
அலமேலுவின் பேச்சை நம்பி அவரது வீட்டிற்கு வரும் ஆண்களை, அங்கு மறைந்திருக்கும் கூட்டாளிகள் உதவியுடன் திடீரென தாக்கி, அவர்களை ஆடையின்றி ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோக்களை காட்டி மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறிப்பதையே இக்கும்பல் தொழிலாக கொண்டிருந்தது.
அவமானத்திற்கு பயந்து பல பிரபலங்கள் மௌனம் காத்த நிலையில், ஓமலூர் காவல் உதவி ஆய்வாளர் பூபதி என்பவர் அளித்த புகாரே இக்கும்பலின் முகத்திரையை கிழித்துள்ளது. பூபதியிடம் 92,000 ரூபாய் பணம் மற்றும் நகைகளை பறித்தபோது இந்த மோசடி விவகாரம் அம்பலமானது. இதனையடுத்து தீவிர வேட்டையில் இறங்கிய மாவட்ட காவல்துறை, அலமேலு உட்பட 9 பேரை கைது செய்த நிலையில், தற்போது மேலும் 4 பேர் பிடிபட்டுள்ளனர்.
அலமேலுவின் செல்போனை ஆய்வு செய்ததில், அதில் பல முக்கியப் புள்ளிகளின் ஆபாச வீடியோக்கள் சிக்கியுள்ளதாக தெரிகிறது. மேலும், இக்கும்பலால் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருந்தால் அச்சமின்றி புகாரளிக்கலாம் என்றும், அவர்களின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும் என்றும் மாவட்ட காவல்துறை உறுதி அளித்துள்ளது.
Read More : செல்வமகள் சேமிப்பு திட்டத்தை விடுங்க..!! இதில் ரூ.1,000 முதலீடு செய்தால் ரூ.11.57 கோடி வரை கிடைக்கும்..!!



