சென்னை கோயம்பேடு நூறடி சாலையில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி விபச்சார தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், அதிர்ச்சியூட்டும் உண்மை ஒன்று வெளிச்சத்துக்கு வந்தது. அந்த விடுதி அறையில், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட கே.கே.நகரைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி ஒருவரை போலீசார் மீட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த துணை நடிகை நாகலட்சுமி, அஞ்சலி, கார்த்திக் குமார் உட்பட 3 பேரை போலீசார் முதலில் கைது செய்தனர். பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் பின்னணிகள் வெளிவந்தன. மாணவியின் தந்தை இறந்த நிலையில், அவரது தாயார் வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்டார். ஆதரவற்ற நிலையில் தனிமையில் தவித்த அந்த மாணவி, கே.கே.நகரில் வசிக்கும் தாயின் தோழியும், ஒரு கிளப் டான்சருமான பூங்கொடி என்பவரின் வீட்டில் தங்கிப் படித்து வந்துள்ளார்.
இந்த சூழலைப் பயன்படுத்திக் கொண்ட பூங்கொடி, ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியைப் பாலியல் தொழிலுக்கு இழுத்துள்ளார். ஆரம்பத்தில் மறுத்த மாணவி, சொகுசு வாழ்க்கை, பணம், விலை உயர்ந்த உடைகள், ஐபோன் போன்ற பரிசுப் பொருட்களால் படிப்படியாக மயங்கி, இதற்கு சம்மதித்துள்ளார். மாணவியின் பெரியம்மா மகளான ஐஸ்வர்யாவும் இந்த பாவச் செயலுக்கு உடந்தையாக இருந்துள்ளார்.
இருவரும் மாணவியைப் பாலியல் தொழிலில் முழுமையாக தள்ளி, பணத்திற்காக காமக்கொடூரர்களின் காமப்பசியை தீர்க்கப் பயன்படுத்தியுள்ளனர். மாணவியின் நெருங்கிய வட்டாரமே இந்தக் கொடுமைக்குக் காரணமாக இருந்த நிலையில், பூங்கொடிக்கு வசதி படைத்த மற்றும் வி.ஐ.பி. வாடிக்கையாளர்களை ஏற்பாடு செய்து கொடுத்தது சினிமா பட இயக்குநரும், காமெடி பட நடிகருமான பாரதி கண்ணன் என்பது தெரியவந்தது.
கோயம்பேடு அனைத்து மகளிர் போலீசார் பாரதி கண்ணனிடம் நடத்திய விசாரணையில், அவர் அந்த மாணவியை தனது சினிமா வட்டாரத்தில் உள்ள பலருக்கும் விருந்தாக்கி லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்தது உறுதி செய்யப்பட்டது. இந்த தகவல்களின் அடிப்படையில், பூங்கொடி, ஐஸ்வர்யா மற்றும் நடிகர் பாரதி கண்ணன் ஆகியோரை குளச்சல் மகளிர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
மேலும், அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மாணவியுடன் தொடர்ந்து உல்லாசத்தில் ஈடுபட்ட கட்டுமான நிறுவன ஊழியர் மகேந்திரன் மற்றும் திமுக நிர்வாகி ரமேஷ் ஆகியோரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பாரதி கண்ணன், மகேந்திரன் மற்றும் ரமேஷ் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட மாணவி, தனக்கு நேர்ந்த கொடூரத்தை வெளியில் சொல்லாமல் தொடர்ந்து பள்ளிக்குச் சென்று வந்துள்ளார். போலீசார் நடத்திய சோதனையில் அவர் சிக்கிய பின்னரே இந்தக் கொடுமை வெளிச்சத்துக்கு வந்தது.
தற்போது, கைது செய்யப்பட்டவர்களின் செல்போன் எண்களை ஆய்வு செய்து, மாணவியுடன் உல்லாசம் அனுபவித்த நபர்கள் யார் யார் என்ற விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் ஒரு நபரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பள்ளி மாணவியை பாலியல் தொழிலுக்குத் தள்ளி பலருக்கு விருந்தாக்கிய வழக்கில் காமெடி நடிகர் பாரதி கண்ணன் கைது செய்யப்பட்டது, சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் பிரபல நடிகர் பாரதி கண்ணன் இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் பேசிய அவர் “ இதுவரை நான் எந்த வழக்கையும் சந்தித்ததில்லை.. சந்திக்க போவதும் கிடையாது.. பாரதி கண்ணன் என்ற துணை நடிகர் இருக்கிறார் என்பது நேற்று தான் தெரியவந்தது.. அவரை ஒரு வழக்கில் போக்சோ சட்டத்தில் கோயம்பேடு போலீசார் கைது செய்துள்ளனர்.. ஆனால் அந்த செய்திக்கு என் போட்டோவை போட்டு செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.. அந்த பாரதி கண்ணனுக்கும் திரைப்பட இயக்குனராக எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை..” என்று தெரிவித்துள்ளார்.