மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தமிழ்நாட்டில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தயாராகும் வகையில் தேர்வு பயிற்சித் திட்டத்தை தாட்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தாண்டுக்கான பன்னோக்கு (தொழில்நுட்பம் சாராத) பணியாளர் தேர்வு (SSC MTC – 2023), 2023 ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வு (SSC CGL), 2023 ஒருங்கிணைந்த மேல்நிலை (10 + 2) அளவிலான தேர்வு (முதல்நிலை) (CHSL (10+2) Examination, இளநிலை பொறியாளர் (SSC JE) உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் நடப்பாண்டில் அறிவிக்கப்பட இருக்கிறது.
எஸ்எஸ்சி வெளியிட்ட தேர்வு திட்ட அட்டவணையின் படி, 2023 Multi Tasking non technical staff தேர்வுக்கான அறிவிப்பு வரும் ஜூன் மாதம் 14ஆம் தேதி வெளியிடப்படும். இதற்கு ஜுலை 14ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். 2023 ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் நிலை – I தேர்வு நடைபெறும் என தெரிவித்துள்ளது. மேலும், SSC CGL 2023 தேர்வுக்கான அறிவிப்பு வரும் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் இணையதளம் மூலமாக மே 1ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலை – I தேர்வு ஜூன்/ஜுலை மாதங்களில் நடைபெற இருக்கிறது.
அதேபோல், SSC CHSL 2023 தேர்வுக்கான அறிவிப்பு வரும் மே 9ஆம் தேதி வெளியிடப்படும். இணையதளம் மூலம் ஜூன் 8 வரை விண்ணப்பங்கள் பெறப்படும். ஜுலை/ஆகஸ்ட் மாதங்களில் நிலை- I எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது. எனவே, இந்த தேர்வுகளுக்கு தமிழ்நாட்டில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தயாராகும் வகையில் தேர்வு பயிற்சித் திட்டத்தை தாட்கோ நிறுவனம் அறிவித்துள்ளது. இப்பயிற்சிக்கான மொத்த செலவுகளையும் தாட்கோ நிறுவனம் ஏற்றுக் கொள்ளும். ஆர்வமுள்ள மாணவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.