தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக, திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. இது வெறும் சாதாரணத் தொகுதிப் பங்கீடு சார்ந்த நகர்வு மட்டுமல்ல, முதல்வர் மு.க. ஸ்டாலின் மிக துல்லியமாக திட்டமிட்டுச் செயல்படுத்தும் ஒரு அரசியல் சதுரங்க ஆட்டம் என்று ஊறப்படுகிறது. விஜயகாந்தின் தேமுதிகவை உள்ளே இழுப்பதன் மூலம், கூட்டணியில் நீண்டகாலமாக நீடிக்கும் சில உள்கட்சிப் பூசல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அறிவாலயம் வியூகம் வகுத்துள்ளது.
இந்த அதிரடி மாற்றத்திற்குப் பின்னணியில், திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே நிலவும் ‘பனிப்போர்’ முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. சமீபகாலமாக தமிழக காங்கிரஸ் தலைவர்கள் திமுகவின் செல்வாக்கை சீண்டும் வகையிலும், ஆட்சியில் ‘அதிகாரப் பங்கு’ கோரியும் பேசி வருவது ஸ்டாலினை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, தொகுதிப் பங்கீடு தொடர்பாக பிடிவாதம் காட்டும் காங்கிரஸிற்கு ஒரு வலுவான மாற்றை தயார் நிலையில் வைத்திருக்க திமுக விரும்புகிறது.
காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் சென்னை வந்தபோது ஸ்டாலினைச் சந்திக்க முடியாமல் போனது, இரு தரப்பிற்கும் இடையே விரிசல் முற்றியுள்ளதையே வெளிப்படையாகக் காட்டுகிறது. இந்த சூழலில், ‘பிளான் பி’ (Plan B) அடிப்படையில் தேமுதிகவை ஸ்டாலின் முன்னிறுத்தியுள்ளார். காங்கிரஸ் அதிக இடங்களை கோரினாலோ அல்லது கூட்டணியை விட்டு வெளியேற துணிந்தாலோ, அதனால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்பத் தேமுதிகவின் வாக்கு வங்கி உதவும் என்று திமுக கணக்கு போடுகிறது.
வட மற்றும் தென் மாவட்டங்களில் தேமுதிகவுக்கு இருக்கும் செல்வாக்கு, காங்கிரஸின் பிடிவாதத்தை குறைக்க உதவும் ஒரு கருவியாக மாற்றப்பட்டுள்ளது. “விருப்பமில்லாதவர்கள் வெளியேறலாம்” என்ற மறைமுக எச்சரிக்கையை தான் தேமுதிகவின் வருகை மூலம் ஸ்டாலின் காங்கிரஸிற்கு விடுத்துள்ளதாக தெரிகிறது.



