தமிழக அரசியல் களம் 2026 தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், திமுகவின் சீனியர் அமைச்சர்களில் ஒருவரான கே. ராஜகண்ணப்பன் பேசிய பேச்சு, தற்போதைய கூட்டணியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் பேசிய அவர், கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை மிக கடுமையாகச் சாடியுள்ளார். அமைச்சரின் இந்தப் பேச்சு, குறிப்பாக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையையும், சமீபகாலமாக ‘ஆட்சியில் பங்கு’ கேட்டு வரும் விசிக-வையும் நேரடியாக தாக்குவது போல் அமைந்துள்ளது.
மேடையில் ஆக்ரோஷமாகப் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், “1967-க்கு பிறகு காங்கிரஸால் தமிழகத்தில் ஆட்சிக்கு வர முடிந்ததா? உண்மையைச் சொன்னால் அவர்களுக்குக் கோபம் வரும். கூட்டணியில் இருந்துகொண்டு ஒரு சிலர் உயிரை வாங்குகிறார்கள்” என பேசினார். மேலும், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையுடனான சந்திப்பைக் குறிப்பிட்டு, “திருமண நிகழ்ச்சிகளில் சந்திக்கும்போது வேறு வழியில்லாமல் அவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறோம்” என அவர் கூறியிருப்பது காங்கிரஸ் தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாகத் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற முழக்கம் வலுத்து வரும் சூழலில், அதற்கு ராஜகண்ணப்பன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். “மறைந்த முதல்வர் கருணாநிதி அவர்கள் 110 இடங்களில் வென்றபோதே கூட்டணி ஆட்சிக்கு இடம் கொடுக்கவில்லை. வரும் தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பார். கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. வேண்டுமென்றால் உங்களுக்குத் தேவையானதை செய்து தருகிறோம், கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள்; அதைத் தாண்டி அதிகாரம் கேட்காதீர்கள்” என அவர் வெளிப்படையாகவே எச்சரித்துள்ளார்.
காங்கிரஸை தாண்டி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும் அமைச்சர் விட்டுவைக்கவில்லை. “கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக இருந்தாலும் சரி, விசிக எம்.எல்.ஏ-வாக இருந்தாலும் சரி, அவர்கள் கேட்டதை செய்து கொடுக்கிறோம். இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்” என அவர் பேசியுள்ளார்.



