தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி நகர்ந்து வரும் வேளையில், கூட்டணி கணக்குகளில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள் அரசியல் அரங்கில் அனலை கிளப்பியுள்ளன. குறிப்பாக, பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் தற்போது தொகுதிப் பங்கீடு தொடர்பாக நிலவும் இழுபறி, இரு கட்சிகளுக்கும் இடையே விரிசல் விழுந்துள்ளதை காட்டுகிறது.
இந்த சூழலில், விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகத்துடன்’ காங்கிரஸ் கட்சி ரகசிய பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள், தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பத்திற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகின்றன. திமுக கூட்டணியில் தங்களுக்கு தேவையான எண்ணிக்கையிலான தொகுதிகள் கிடைக்காத பட்சத்தில், காங்கிரஸ் கட்சி மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுக்க தயாராகிவிட்டது என்பதைச் சோடங்கர் அளித்த சமீபத்திய பேட்டி உறுதிப்படுத்துவது போல் அமைந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, விஜய்யின் தவெக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இணைந்தால், அக்கட்சிக்கு 60-க்கும் மேற்பட்ட தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்தத் திடீர் நகர்வு, திராவிட கட்சிகளின் ஆதிக்கத்திலிருக்கும் தமிழக அரசியலில் ஒரு புதிய சக்தியை உருவாக்குவதோடு, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளுக்கும் கடும் சவாலாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
தேர்தல் நெருங்கும் வேளையில் காங்கிரஸின் இந்த ‘பிளான் பி’ வியூகம் உண்மையானால், அது 2026 தேர்தல் களத்தின் போக்கையே மாற்றி அமைக்கக்கூடும். தமிழக வெற்றிக் கழகத்தின் இளரத்தமும், காங்கிரஸின் பாரம்பரிய வாக்கு வங்கியும் இணையும் பட்சத்தில், அது ஆளுங்கட்சிக்கு தேர்தல் களத்தில் ஒரு நெருக்கடியான சூழலை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை. திராவிட அரசியலுக்கு மாற்றாக ஒரு வலிமையான கூட்டணி உருவாகுமா என்பது இன்னும் சில வாரங்களில் தெளிவாக தெரிந்துவிடும்.
Read More : BREAKING | 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியில்லை..!! நடிகர் சரத்குமார் அதிரடி அறிவிப்பு..!!



