ஆரோக்கியம் கெட்டுப் போவதற்குக் காரணமாக அமையும் பல காரணிகளில், நாள்பட்ட மலச்சிக்கல் ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது. நார்ச்சத்து இல்லாத உணவுகள், போதிய நீர் அருந்தாமை மற்றும் சிரமப்பட்டு மலம் கழித்தல் போன்ற பழக்கங்களே இதற்கு முக்கியக் காரணங்கள் ஆகும். இந்தப் பிரச்சனைக்கு முறையான சிகிச்சை எடுக்காவிட்டால் மூல நோய், மலக்குடல் இறக்கம் போன்ற கோளாறுகள் உருவாக வாய்ப்புள்ளது.
மலச்சிக்கலுக்கான தீர்வுகளை ஆராய்ந்த பிரிட்டிஷ் டயடெட்டிக் அஸோஸியேஷனைச் (BDA) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், இந்தப் பிரச்சனையைத் தீர்க்க மூன்று இயற்கையான வழிமுறைகளைச் சிறந்த மாற்றுச் சிகிச்சையாகப் பரிந்துரைத்துள்ளனர்.
கிவி பழம் (Kiwi Fruit) :
மலச்சிக்கலுக்குத் தீர்வு காணச் சிறந்த இயற்கை வழிமுறையாகக் கிவி பழத்தை ஆராய்ச்சியாளர்கள் முன்வைக்கின்றனர். ஒரு நாளைக்கு 2 முதல் 3 கிவி பழங்கள் என்ற கணக்கில் நான்கு வாரங்கள் தொடர்ந்து உட்கொள்ளும்போது, அப்பழங்களில் உள்ள அதிகளவு நார்ச்சத்து மற்றும் ஆக்டினிடின் (Actinidin) என்ற என்சைம் ஆகியவை இணைந்து செயல்படுகின்றன. இவை இரண்டும் புரதச் சத்து நிறைந்த உணவுகளை வயிறு மற்றும் சிறுகுடல் வழியாக எளிதில் கடத்தி, செரிமானத்தைச் சிறப்பாகச் செய்ய உதவுகின்றன.
கனிமச் சத்துக்கள் நிறைந்த மினரல் வாட்டர் :
தினமும் 0.5 முதல் 1.5 லிட்டர் வரை, அதிகளவு கனிமச் சத்துக்கள் (Mineral-rich water) நிறைந்த மினரல் வாட்டர் குடிப்பதும் மலச்சிக்கலைப் போக்க உதவும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த நீரில் கலந்திருக்கும் மக்னீசியம் மற்றும் சல்ஃபேட் போன்ற தாதுக்கள், தண்ணீரைச் சிறுகுடலுக்குள் அதிகம் இழுத்து, மலத்தை இளகச் செய்து, எளிதாக வெளியேற உதவுகின்றன.
ரை பிரட் (Rye Bread) :
ரை பிரட் ஸ்லைஸ்களை ஒரு நாளில் 6 முதல் 8 துண்டுகள் என்ற கணக்கில் மூன்று வாரங்கள் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் மலச்சிக்கலுக்குப் பலன் கிடைக்கும் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், ஒரு நாளைக்கு இவ்வளவு அதிக அளவில் ரை பிரட் சாப்பிடுவது பலருக்கு இயலாத ஒன்றாக இருக்கலாம்.
எனவே, இந்த 3 வழிகளில், தினமும் கிவி பழம் உண்பது அல்லது கனிம சத்துக்கள் நிறைந்த நீர் அருந்துவதே, இயற்கையான முறையில் மலச்சிக்கலுக்கு தீர்வு காணப் பெரும்பாலான மக்களுக்குச் சிறந்த மற்றும் எளிமையான சிகிச்சை முறையாக அமையும் என ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
Read More : திருப்பதி சென்றால் முதலில் எந்த கடவுளை வணங்க வேண்டும் தெரியுமா..? அடுத்த டைம் போகும்போது மறந்துறாதீங்க..!!



