தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (25), ஒரு எலெக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்கு பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, மணிகண்டனும் அந்தப் பெண்ணும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முயன்றனர். அப்போது, அவர்களைப் பிடித்த போலீசார், அந்தப் பெண்ணுக்கு 18 வயது ஆகாததால், அறிவுரை கூறி பெற்றோரிடம் அனுப்பி வைத்தனர். இருப்பினும், மணிகண்டன் மீது போக்சோ வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
இந்நிலையில், இந்த பிரச்சனைக்குப் பிறகு, பெண் வீட்டார் மணிகண்டன் மீது கடும் கோபத்தில் இருந்தனர். போலீசார் சமரசம் செய்த பிறகும், மணிகண்டன் தொடர்ந்து அந்தப் பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இந்த சூழலில், சில நாட்களுக்கு முன்பு, அந்தப் பெண், தோழிகள் வீட்டுக்கு செல்வதாக சொல்லிவிட்டு சென்றவர், இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் வீடு திரும்பியுள்ளார்
தோழிகளுடன் பாண்டிச்சேரிக்கு சுற்றுலா சென்று வந்ததாக பெற்றோரிட கூறினாலும், அவர் மணிகண்டனுடன் தான் சென்று வந்தார் என்பது குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், இளம்பெண்ணை கண்டித்துள்ளனர். அப்போது, “வேறு ஒருவருக்குத் திருமணம் செய்து வைத்தால், தாலியை கழற்றிவிட்டு மணிகண்டனுடன் சென்றுவிடுவேன்” என அந்த பெண் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், திங்கட்கிழமை வேலைக்கு செல்வதற்காக பைக்கில் சென்ற மணிகண்டனை, தோப்பூர் அருகே இடைமறித்த 3 பேர், அவரை விரட்டிச் சென்று வெட்டிப் படுகொலை செய்தது. மேலும், அவர் உயிரிழந்ததை உறுதி செய்த பிறகுதான் அங்கிருந்து மூவரும் தப்பியோடினர். இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது, கொலையாளிகள் மூவரும் சிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. விசாரணையில், மணிகண்டன் காதலித்த பெண்ணின் 11ஆம் வகுப்பு மாணவனான தம்பி, தனது நண்பர்களுடன் சேர்ந்து இந்த கொலையை செய்தது தெரியவந்தது.
மணிகண்டனும், காதலியும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், வசதி மற்றும் பொருளாதார வேறுபாடுகள் காரணமாக காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த சம்பவம் நடந்துள்ளது. சிறுவர்கள் கொலை செய்தால் பெரிய தண்டனை கிடைக்காது என ஒரு வழக்கறிஞர் ஆலோசனை வழங்கியதாக, மணிகண்டனின் சித்தி குற்றம்சாட்டியுள்ளார். அதன்படி, அந்த மாணவனை ஏவி, மணிகண்டனை கொலை செய்துள்ளதாக அவர் புகார் அளித்துள்ளார். தற்போது இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.