அண்டை நாடான நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் கடுமையான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இந்த திடீர் இயற்கை பேரிடரில் சிக்கி இதுவரை 47 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பல சாலைகள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதால், நாட்டின் முக்கியப் பகுதிகளில் போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள கிழக்கு மாவட்டமான இலாம் பகுதியில் மட்டும் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பல்வேறு இடங்களில் மின்னல் தாக்கியதாலும், வெள்ளப்பெருக்காலும் பலி எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளதாக ஆயுதப்படை பிரிவின் செய்தித் தொடர்பாளர் காளிதாஸ் தவ்போஜி உறுதி செய்துள்ளார்.
நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 9 பேர் மாயமாகி உள்ளனர். இமயமலையை ஒட்டிய கிழக்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், இவர்களை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக நேபாளத்தின் இயற்கை பேரிடர் மேலாண்மைப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் சாந்தி மகத் தெரிவித்துள்ளார்.
இயற்கை பேரிடரின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, நேபாள உள்துறை அமைச்சகம் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய இரண்டு நாட்களுக்கு நாடு முழுவதும் பொது விடுமுறை அறிவித்துள்ளது. இந்த விடுமுறை காலத்தில் அவசர சேவைகளில் உள்ளவர்கள் தவிர மற்றவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வழக்கத்துக்கு மாறாக அதிக கனமழை பெய்துள்ளதால், நாட்டின் 12 மாவட்டங்களில் ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. தலைநகர் காத்மாண்டு, பக்மதி, கண்டாகி, லும்பினி, மாதேஷ் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை தீவிரமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பாதையில் வசிக்கும் மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருவதாக அரசு செய்தித் தொடர்பாளர் ராமேஸ்வர் டங்கல் தெரிவித்துள்ளார்.
நிலச்சரிவு காரணமாக பல முக்கிய சாலைகள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால், போக்குவரத்து முடங்கியுள்ளது. குறிப்பாக, நேபாளம் – சீனாவை இணைக்கும் முக்கியச் சாலையான அரணிகோ நெடுஞ்சாலையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து தடைபட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக உள்நாட்டு விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், சர்வதேச விமான சேவைகள் வழக்கம்போல் இயங்கி வருகின்றன.
முன்னதாக, கடந்த மாதம் இங்கு இளைஞர்கள் நடத்திய போராட்டங்களால், சீனா ஆதரவில் இருந்த பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி தனது பதவியை இழந்ததும், சுசீலா கார்கி புதிய பிரதமராகப் பொறுப்பேற்றதும் குறிப்பிடத்தக்கது. அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், இப்போது நாடு இயற்கை பேரிடரால் பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளது.