காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வரும், ஸ்ரீசன் பார்மாசூட்டிகல் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிஃப் எனும் இருமல் மருந்தை உட்கொண்டதால் மத்தியபிரதேசத்தில் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் குழந்தைகள் உயிரிழப்பு சம்பவம் நடைபெற்று இருப்பது இந்தியாவையே உலுக்கியுள்ளது. தொடர்ந்து இந்த இருமல் மருந்து பயன்படுத்திய குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றன.
இதுவரை மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 16 குழந்தைகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 குழந்தைகள் உயிரிழந்ததை தொடர்ந்து, இருமல் மருந்து குடித்து உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசுக்கு, மத்தியபிரதேச மாநில சுகாதாரத்துறை கடிதம் எழுதி இருந்தது.
இதையடுத்து ஆலையின் செயல்பாடு தொடர்பாக தமிழ்நாடு அரசு, 26 பக்கங்களை கொண்ட அறிக்கையை மத்திய அரசுக்கு தாக்கல் செய்துள்ளது. அதில், ஸ்ரீசன் நிறுவனம் கடுமையான விதிமீறல்களில் ஈடுபட்டதோடு, சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தமிழக மருந்து கட்டுப்பாட்டு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மருந்து உற்பத்தியை உடனடியாக நிறுத்துவதற்கான ஆணை (03.10.2025) பிறப்பிக்கப்பட்டது. உற்பத்தி உரிமத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 12ம் தேதிக்குள் முறையான விளக்கம் அளிக்கவில்லை என்றால், 13-ஆம் தேதி லைசென்ஸ் கேன்சல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
நச்சுப்பொருள் கலந்ததால், தயாரிப்பு நிறுவனத்தின் மீது குற்றவியல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. நிரூபிக்கப்பட்டால், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ₹10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சென்னை கோடம்பாக்கம் பகுதியில் வசித்து வந்த நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் (75) நேற்ச்று காலை மத்திய பிரதேச காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில், இருமல் மருந்து காரணமாகக் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்தும், இந்த மருந்துகளின் ஏற்றுமதி விவரங்கள் குறித்தும் உலக சுகாதார மையம் இந்திய அரசிடம் விளக்கம் கேட்டிருந்தது. தமிழ்நாட்டில் ஸ்ரீசன் மற்றும் குஜராத்தில் ரெட்னெக்ஸ் மற்றும் ஷேப் பார்மா ஆகிய நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்பட்ட மூன்று இருமல் சிரப்களில் டைஎதிலீன் கிளைகோல் என்ற விஷத் தன்மையுடைய ரசாயனம் இருந்தததாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட கோல்ட்ரிஃப் மருந்தில் 48.6 சதவீதமும், ரெஸ்பிஃப்ரெஷ் TR சிரப்பில் 1.34 சதவீதமும் மற்றும் ரீலைஃப் சிரப்பில் ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவும் டைஎதிலீன் கிளைகோல் சேர்க்கப்பட்டிருந்ததையும் மத்திய மருந்துத் தரநிலை கட்டுப்பாட்டு அமைப்பு உறுதி செய்துள்ளது. சர்ச்சைக்குரிய சிரப்கள் எதுவும் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படவில்லை என்று தெரிவித்துள்ள இந்திய ஒழுங்குமுறை அமைப்பு, குறிப்பிட்ட கோல்ட்ரிஃப், ரெஸ்பிஃப்ரெஷ் TR, மற்றும் ரீலைஃப் என்ற மூன்று சிரப் களும் சந்தையிலிருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது.
குற்றத்தில் ஈடுபட்ட 3 நிறுவனங்கள் இனி எந்தவொரு மருந்தையும், மருத்துவப் பொருட்களையும் உற்பத்தி மற்றும் விநியோகம் செய்யத் தடை விதித்த மத்திய சுகாதார அமைச்சகம் மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய ஆறு மாநிலங்களில் உள்ள மருந்து உற்பத்தி நிறுவனங்களை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளது. நாட்டில் ஏற்படும் பொது சுகாதார நெருக்கடியைத் தடுக்க விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு உலக சுகாதார மையத்திடம் தெரிவித்துள்ளது.