மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரஜினிகாந்தின் கூலி படம் கடந்த 14-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.. ரஜினிகாந்தின் 171வது படமாக உருவாகி உள்ள இந்த படத்தை. லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்.. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் கூலி படத்தை தயாரித்துள்ளது.. இந்த படம் சுமார் ரூ.375 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ளது.. இந்த படத்தில் நாகார்ஜுனா, சௌபின் ஷாகிர், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்..
மேலும் பாலிவுட் நடிகர் ஆமீர் கானும் இதில் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.. ஆனால், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான கூலி படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.. எனினும் வசூல் ரீதியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.. இப்படம் இதுவரை சுமார் 400 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது..
இதனிடையே, அதிகளவிலான சண்டைக் காட்சிகள் இருந்ததால் கூலி படத்திற்கு சென்சார் போர்டு A சான்றிதழ் வழங்கியது.. இந்த நிலையில் கூலி திரைப்படத்தை U/A சான்றிதழுடன் திரையிட அனுமதி கோரி படத் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.. கூலி படத்தை விட அதிக வன்முறை காட்சிகள் இருந்த கேஜிஎஃப் மற்றும் பீஸ்ட் படங்களுக்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டது என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.. எனவே கூலி படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க சென்சார் போர்டுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது..
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.. அப்போது, A சான்றிதழ் காரணமாக 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் திரைப்படத்தை பார்க்க முடியவில்லை என்பதால் U/A சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என மனு தாரர் தரப்பு வாதிட்டது.. அப்போது சென்சார் போர்டு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், படத்தின் சில காட்சிகளை நீக்கினால் U/A வழங்க தயாராக இருப்பதாக கூறினார்.. இந்த A சான்றிதழ் வழங்கிய உடன் அதனை ஏற்றுக்கொண்ட நிலையில் தற்போது தான் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே மனுவுக்கு பதிலளிக்க கூடுதல் அவகாசம் தேவை என்று கூறினார்.. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த மனு குறித்து சென்சார் போர்டு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை வரும் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்..
Read More : நடிகர் ரவி மோகன் சொத்துக்கு ஆபத்து? சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..