தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171-வது படமாக உருவான கூலி திரைப்படம் இன்று (ஆகஸ்ட் 14) உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நாகார்ஜுனா, பாலிவுட் முன்னணி நடிகர் அமீர் கான், கன்னட நடிகர் உபேந்திரா, நடிகர் சத்யராஜ், நடிகை ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்களே நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், இப்படம் முன்பதிவிலேயே ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாகத் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ரஜினிகாந்த் திரைத்துறையில் அடியெடுத்து வைத்து 50ஆம் ஆண்டில் கூலி திரைப்படம் வெளியாவதால் அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முதலமைச்சர் முக.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கூலி படத்தை முன்கூட்டியே பார்த்துவிட்டு ரஜினியை வாழ்த்தியுள்ளனர்.
இந்த சூழலில் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நேற்று எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், நடிகர் ரஜினிகாந்த் தொடங்கி படத்தில் நடித்த அனைவரையும் குறிப்பிட்டு உருக்கமாக நன்றி தெரிவித்தார். மேலும், கூலி படத்தை பார்த்தவர்கள் படத்தின் முக்கியமான திருப்பங்கள் மற்றும் ஸ்பாய்லர்களை சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டாம் என்று ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார்.
அதேபோல, கூலி படம் LCU-வில் வராது என்றும் இது ரஜினிக்கான படம் மட்டுமே என்பதையும் லோகேஷ் கனகராஜ் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், படத்தில் நிறைய சர்ப்ரைஸ் இருப்பதாகவும், அது உங்களை நிச்சயம் கவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.