இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான திரைப்படம் ‘கூலி’. ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று உலகெங்கும் வெளியான இந்தப் படம், இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று. ரஜினியுடன் ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகார்ஜூனா, உபேந்திரா, சௌபின் ஷாஹிர், அமீர் கான் எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
படம் வெளியான முதல் நான்கு நாட்களிலேயே ரூ.400 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகப் படத்தைத் தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இருப்பினும், அதன் பிறகு வசூல் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. 25 நாட்களில், இப்படம் உலகளவில் ரூ.675 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, வட அமெரிக்காவில் மட்டும் ரூ.56 கோடி வசூல் செய்து, கமல்ஹாசனின் மொத்தப் படங்களின் வசூலை முறியடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
‘கூலி’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தாலும், விமர்சனங்களும் எழுந்தன. ரஜினி ரசிகர்களே படத்தில் பல குறைகள் இருப்பதாகவும், உபேந்திரா போன்ற நடிகர்களை லோகேஷ் கனகராஜ் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றும் கருத்து தெரிவித்தனர். எனினும், விமர்சனங்களுக்கு மத்தியில் வசூலில் எந்த குறையும் இல்லை.
திரையரங்குகளில் வெளியாகி 25 நாட்களை நிறைவு செய்துள்ள ‘கூலி’, இன்று நள்ளிரவு முதல் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. திரையரங்கிற்கு சென்று படத்தை பார்க்க தவறவிட்டவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி வீட்டில் இருந்தே பார்த்துக் கொள்ளலாம்.
Read More : குழந்தை வரம் தரும் சிறப்பு கோயில்கள்..!! தம்பதிகளே கண்டிப்பா ஒருமுறையாவது சென்று வாருங்கள்..!!