கொரோனா வைரஸ், கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் இருந்து பரவத் தொடங்கியது. 2020ஆம் ஆண்டில் இந்த வைரஸின் தாக்கம் பரவலாக காணப்பட்டது. அதன் பிறகு பல்வேறு மாறுபட்ட வடிவங்களில் தோன்றி வந்தது. ஒமைக்ரான், டெல்டா போன்ற வகைகள் உலக நாடுகளில் பல கொடிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் தான் தற்போது அமெரிக்காவில் XFG என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த செய்தி தற்போது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், மருத்துவ நிபுணர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இதுபற்றி கூறுகையில், இந்த புதிய வகை வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
அமெரிக்க சுகாதாரத்துறை சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, XFG எனப்படும் இந்த புதிய வகை கொரோனா தொற்று, முதன் முதலில் தென்கிழக்கு ஆசியா பகுதியில் கண்டறியப்பட்டது. பிறகு, அமெரிக்காவின் அலபாமா, கலிபோர்னியா, புளோரிடா ஆகிய மாகாணங்களில் பரவியுள்ளது தெரியவந்துள்ளது.
மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், இது கொரோனாவின் SARS-CoV-2 வகையின் உருமாற்றம் தான் என்றும், தற்போது வரை இது பெரிய ஆபத்தாக மாறவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். எனவே, பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும், சுகாதாரத்துறை வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்றும் முகக்கவசம், கைகளை சுத்தமாக வைத்தல், சமூக இடைவெளி ஆகியவற்றை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளி, காய்ச்சல், உடல் வலி, வாந்தி மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் இருக்கும். இதற்கென தனிப்பட்ட மருந்துகளோ அல்லது தடுப்பு சிகிச்சையோ தற்போது இல்லை என்றும் நோயாளிகளின் நிலையைப் பொறுத்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.