மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பச்சிளம் குழந்தைகள் இருமல் மருந்து குடித்ததால் அடுத்தடுத்து பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக, மத்தியப்பிரதேசத்தில் மட்டும் குறிப்பிட்ட அந்த இருமல் மருந்தை உட்கொண்ட 22 பிஞ்சு குழந்தைகளின் உயிர்கள் பலியாகியுள்ளன. இந்தத் துயரச் சம்பவத்திற்குக் காரணமான மருந்து, ‘கோல்ட்ரிப்’ (Coldrip) என்ற பெயரில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த உயிர்க்கொல்லி மருந்தை தயாரிக்கும் நிறுவனமான ஸ்ரீசன் பார்மா (Srisan Pharma), காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கி வருகிறது. 22 குழந்தைகளின் மரணத்திற்கு காரணமான இந்த விவகாரம் தொடர்பாக மத்திய பிரதேச மாநிலக் காவல்துறையின் தனிப்படை உடனடியாக வழக்குப் பதிவு செய்தது. ‘கொலையில்லாத மரணத்தை விளைவித்தல்’ மற்றும் ‘கலப்பட மருந்து தயாரித்தல்’ ஆகிய இரண்டு முக்கிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
விசாரணையின் தொடர்ச்சியாக, மத்தியப்பிரதேச காவல் துறையின் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரசியா ஜிதேந்திர ஜாட் தலைமையிலான தனிப்படை, மருந்து நிறுவனத்தின் உரிமையாளரான 75 வயது ரங்கநாதனை சென்னையில் வைத்து கைது செய்தது. சென்னை கோடம்பாக்கம், நாகார்ஜூனா நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டு, தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குழந்தைகள் பலியான விவகாரம் குறித்து பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை தனியாக விசாரணையைத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள ஸ்ரேசன் பார்மா நிறுவன உரிமையாளர் ரங்கநாதனின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், இந்த மருந்து நிறுவனத்தின் செயல்பாடுகளை முறையாக கண்காணிக்கத் தவறியதாகக் குற்றம்சாட்டப்பட்டு ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அரசு அதிகாரிகள் தீபா ஜோசப் மற்றும் கார்த்திகேயன் ஆகியோரின் வீடுகளிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை அண்ணா நகர், பல்லாவரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல முக்கியப் பகுதிகளிலும் இந்தச் சோதனைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
Read More : நெருங்கும் தீபாவளி..!! ரயிலில் இந்த பொருட்களை மட்டும் எடுத்துச் செல்லாதீங்க..!! சிறை தண்டனை உறுதி..!!