இம்பாலில் உள்ள மணிப்பூர் உயர் நீதிமன்றம், வடகிழக்கு இந்தியாவின் முதல் திருநங்கை மருத்துவரான டாக்டர் பியோன்சி லைஷ்ராம் அவர்களின் பெயர் மற்றும் பாலினத்தைப் பிரதிபலிக்கும் வகையில் புதிய கல்விச் சான்றிதழ்களை வழங்குமாறு மாநிலத்தின் பல கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ. குணேஷோர் சர்மா தலைமையிலான தனி அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது. முன்னதாக, அவரின் கல்வி பதிவுகளில் “போபோய் லைஷ்ராம், ஆண்” என பெயரும் பாலினமும் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், 2019ஆம் ஆண்டு பாலின மறுசீரமைப்பு அறுவைச் சிகிச்சைக்குப் பின், இம்பால் மேற்கு மாவட்ட நீதிபதி திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019ன் கீழ், புதிய பெயர் “டாக்டர் பியோன்சி லைஷ்ராம்” என சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கினார்.
அதன்படி, ஆதார், பான், வாக்காளர் அட்டை போன்ற ஆவணங்களில் பெயரும் பாலினமும் புதுப்பிக்கப்பட்டன. எனினும், BOSEM (மணிப்பூர் இடைநிலைக் கல்வி வாரியம்), COHSEM (மணிப்பூர் உயர்நிலைக் கல்வி கவுன்சில்) மற்றும் மணிப்பூர் பல்கலைக்கழகம் (MU) ஆகியவை தங்கள் துணைச் சட்டங்களில் விதிகள் இல்லையெனக் கூறி சான்றிதழ்களில் மாற்றம் செய்ய மறுத்தன.
இதற்கு எதிராக, நீதிமன்றம் திருநங்கைகள் சட்டம், 2019 என்பது ஒரு சிறப்பு சட்டம் என்பதால், பொதுவான விதிகளை மீறி முன்னுரிமை பெறும் என்றும், அனைத்து கல்வி நிறுவனங்களும் திருநங்கையின் விண்ணப்பத்தின் அடிப்படையில் பதிவுகளைச் சரிசெய்யும் கடமையுடையவை என்றும் தெளிவுபடுத்தியது.
அதன்படி, BOSEM, COHSEM, MU மற்றும் மணிப்பூர் மருத்துவ கவுன்சில் ஆகியவை, ஒரு மாதத்திற்குள் டாக்டர் பியோன்சி லைஷ்ராமுக்கு புதிய சான்றிதழ்களை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மாநிலத்தின் அனைத்து நிறுவனங்களும் இதனை நடைமுறைப்படுத்த, மணிப்பூர் தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.
Read more: Result: 12-ம் வகுப்பு துணைத் தேர்வு மறுமதிப்பீடு முடிவுகள் வெளியீடு…!