நடிகர் மோகன்லால் நடித்த பிரபலமான ‘த்ரிஷ்யம்’ திரைப்படத்தின் பாணியை பின்பற்றி, தனது மனைவியை கொடூரமாக கொலை செய்து, சாட்சியங்களை அழித்து, காணாமல் போனதாக நாடகமாடிய கணவனை புனே காவல்துறை கைது செய்துள்ளது
புனேவின் சிவானே பகுதியைச் சேர்ந்தவர் சமீர் ஜாதவ். தனியார் பள்ளி ஆசிரியையான அஞ்சலி என்பவரை திருமணம் செய்த இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சமீர் ஜாதவ் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததால், தனது மனைவி அஞ்சலியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, கடந்த அக்டோபர் 26ஆம் தேதி, சமீர் ஜாதவ், அஞ்சலியை ஒரு கிடங்கிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர் அஞ்சலியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். கொலைக்கு பிறகு, அஞ்சலியின் சடலத்தை அதே இடத்தில் எரித்து, சாம்பலை அங்கிருந்த ஆற்றில் வீசி, தடயங்களை முழுமையாக அழித்துள்ளார்.
கொலையை மறைப்பதற்காக, அஞ்சலியின் செல்போனை பயன்படுத்தி, அவரது நண்பருக்கு ‘ஐ லவ் யூ’ என்று குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அந்த குறுஞ்செய்திக்கு பதில் வந்தபோது, அவரே அதற்கு பதிலளித்து, அஞ்சலி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாக போலி ஆதாரங்களை திரட்ட முயன்றுள்ளார்.
மனைவியை கொன்ற பிறகு, சமீர் ஜாதவ் தனது மனைவி காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து மீண்டும் மீண்டும் போலீஸ் நிலையத்திற்கு வந்து, மனைவியின் கொலையாளியை கண்டுபிடித்து தருமாறு நாடகமாடியுள்ளார். இருப்பினும், சமீரின் தொடர்ச்சியான கேள்வி கேட்பது, அவரது நடவடிக்கைகளில் இருந்த தடுமாற்றம், அஞ்சலியின் செல்போன் இருப்பிடம் குறித்த முரண்பாடுகள், சிசிடிவி காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்கள் ஆகியவை காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின.
தீவிர விசாரணைக்கு பிறகு, சமீர் ஜாதவ் வேறு வழியின்றி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். ‘த்ரிஷ்யம்’ திரைப்படத்தின் உத்வேகத்தில் இந்த கொலையை செய்ததாகவும் அவர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். இந்த கொடூர செயல் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : கொலையை விபத்தாக மாற்றுவது எப்படி..? மாமியாரை எரித்து சாம்பலாக்கிய மருமகள்..!! அடுத்து நடந்த பயங்கரம்..!!



