சென்னை அடையாறு பகுதியில் கடந்த சில நாட்களாக காகங்கள் திடீரென மர்மமான முறையில் இறந்து விழுந்த சம்பவம், மாநகர மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியிருந்தது. இந்த மர்ம மரணங்களுக்கான பின்னணியை ஆய்வு செய்ததில், தற்போது அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த காகங்களின் மாதிரிகளை ஆய்வு செய்த போபாலில் உள்ள மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம், அந்த பறவைகளுக்கு ‘H5N1’ எனப்படும் பறவை காய்ச்சல் பாதிப்பு இருந்ததை உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலருக்கு அவசர எச்சரிக்கை கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.
பறவை காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சுகாதாரத் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தொற்று பறவைகளிடமிருந்து மனிதர்களுக்கும் பரவக்கூடும் என்பதால், பொது சுகாதார நலன் கருதி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இறந்து கிடக்கும் பறவைகளை முறையாக கையாளுதல் மற்றும் அவற்றை ஆழமான குழிகளில் புதைத்து அப்புறப்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை சுற்றுவட்டாரத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் ஏதேனும் அசாதாரண மாற்றங்கள் அல்லது பறவை மரணங்கள் நிகழ்கிறதா என்பதை கண்காணிக்க சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களுக்கு அருகே காகங்களோ அல்லது வேறு ஏதேனும் பறவைகளோ மர்மமான முறையில் இறந்து கிடப்பதை கண்டால், அவற்றை வெறும் கையால் தொட வேண்டாம் என்றும், உடனடியாக உள்ளாட்சி அமைப்புகளுக்கோ அல்லது சுகாதாரத் துறைக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவித்தாலும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது. பறவைக் காய்ச்சல் பரவலை தடுக்க தேவையான மருந்துகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை தயார் நிலையில் வைத்துள்ளதாக தமிழ்நாடு அரசு உறுதி அளித்துள்ளது.
Read More : 2.5 கோடி ஆதார் எண்கள் ரத்து..!! இனி எந்த சலுகைகளும் கிடைக்காது..!! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!!



