டெல்லியில், தந்தை என்ற உறவுக்கே களங்கம் விளைவிக்கும் வகையில் அரங்கேறியுள்ள ஒரு கொடூர சம்பவம் நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பஹர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த கௌரவ் குமார் என்பவர், தனது 14 வயது மகளையே பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தன்று கௌரவ் குமாரின் மனைவி தனது சொந்த ஊரான பீகாருக்குச் சென்றிருந்த நிலையில், கௌரவ் தனது 14 மற்றும் 8 வயதுடைய இரு மகள்களுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்ட அவர், கடந்த ஜனவரி 31-ஆம் தேதி இரவு தனது மூத்த மகளை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதால், அந்த சிறுமி சில நாட்கள் உயிருக்குப் பயந்து அமைதியாக இருந்துள்ளார். இந்த அச்சத்தையே தனது வக்கிரத்திற்கு சாதகமாக்கிக் கொண்ட கௌரவ், கடந்த 15 நாட்களில் பலமுறை தனது மகளைத் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
தந்தையின் தொடர் அத்துமீறல்களையும், சொல்ல முடியாத சித்திரவதைகளையும் தாங்க முடியாத அந்த சிறுமி, இறுதியாக மன தைரியத்தை வரவைத்து காவல் நிலையத்தின் கதவுகளை தட்டியுள்ளார். அங்கு அவர் அளித்த வாக்குமூலத்தைக் கேட்டுப் போலீசாரே நிலைகுலைந்து போயினர். சிறுமியின் புகாரைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த பஹர்கஞ்ச் போலீசார், உடனடியாக கௌரவ் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தற்போது மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, அவருக்குத் தேவையான மனநல ஆலோசனைகளும் பாதுகாப்பும் வழங்கப்பட்டு வருகின்றன.



