தேனி மாவட்டம் சின்னமனூர் மார்க்கையன்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீனா (31). இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், போடி முந்தலைச் சேர்ந்த மாசு காளை என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, பிரவீனா தனது குழந்தையை கணவனிடம் விட்டுவிட்டு மாசு காளையுடன் கடந்த 10 ஆண்டுகளாக கணவன் – மனைவி போல வாழ்ந்து வந்துள்ளார். அவர்களுக்கு 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில், பிரவீனாவுக்கும் மாசு காளைக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, பிரவீனாவுக்கு திருப்பத்தூரைச் சேர்ந்த வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த மாசு காளை, பிரவீனாவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். கள்ளக்காதலனின் கொடுமையால் ஆத்திரமடைந்த பிரவீனா, தனது தந்தை தங்கையாவிடம் சென்று, காதலன் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகவும், அவரை வந்து கண்டிக்குமாறும் அழைத்துள்ளர்.
ஏற்கெனவே மகளின் இந்தத் தகாத உறவு காரணமாக விரக்தியில் இருந்த தங்கையா, இந்த புதிய உறவு குறித்துக் கேள்விப்பட்டு மேலும் கோபமடைந்தார். மகளின் கள்ளக்காதல் விவகாரங்களால் கோபத்தின் உச்சிக்கு சென்ற தங்கையா, பிரவீனாவை கொலை செய்ய முடிவெடுத்தார். இதையடுத்து, பிரவீனாவை திருப்பூருக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி, தன்னுடன் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.
போடி சாலையில் உள்ள பங்காரு குளத்தின் அருகே வண்டியை நிறுத்திய தங்கையா, தான் மறைத்து வைத்திருந்த தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மாத்திரையை வலுக்கட்டாயமாகப் பிரவீனாவுக்கு கொடுத்து கொலை செய்ய முயன்றுள்ளார். பிரவீனா மாத்திரையைச் சாப்பிட மறுத்த நிலையில், ஆத்திரமடைந்த தங்கையா அவர் அணிந்திருந்த துப்பட்டாவை பயன்படுத்தி மகளின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
பின்னர், கொலையை மறைப்பதற்காக, பிரவீனாவின் உடலை சுற்றிப் பூச்சி மாத்திரைகளைப் போட்டுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். காலையில் உடலைப் பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆரம்பத்தில் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரித்த போலீசார், அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் தங்கையாவிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவரே தனது மகளை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். கள்ளக்காதல் விவகாரத்தில் பெற்ற மகளை தந்தையே கொலை செய்த சம்பவம் தேனி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.



