உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள நங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திசோத்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது மகன் சவுரப் (30). சவுரப்புக்குத் திருமணம் ஆன நிலையில், தந்தை சுபாஷ், தனது மருமகள் உடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த முறையற்ற உறவு குறித்து மகன் சவுரப்புக்கு தெரியவந்தபோது, அவர் தந்தை சுபாஷுடன் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்தக் குடும்பப் பிரச்சனை தொடர்ந்து வந்த நிலையில், ஆத்திரத்தில் இருந்த சுபாஷ் ஒரு கொடூர முடிவை எடுத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 12-ஆம் தேதி சவுரப் வயல்வெளிக்குச் சென்று கொண்டிருந்தபோது, சுபாஷ் அவருக்குப் பின்னால் சென்று, தான் மறைத்து வைத்திருந்த மண்வெட்டியால் சரமாரியாக தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் சவுரப் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்ததை உறுதிப்படுத்திக் கொண்ட சுபாஷ், உடலை அங்கேயே போட்டுவிட்டு வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.
அதன் பின்னர், நடந்ததெல்லாம் தெரியாதது போல் நடித்த சுபாஷ், இரண்டு நாட்கள் கழித்து, அதாவது 14-ஆம் தேதி, தனது மகனைக் காணவில்லை என்று நங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதே நாளில், வயல்வெளியில் சவுரப்பின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சடலத்தைக் கைப்பற்றிய போலீசார், ஆரம்பத்தில் “காட்டு விலங்குகள் தாக்கியிருக்கலாம்” என்று சந்தேகித்தனர். ஆனால், சவுரப்பின் உடலைக் கூறாய்வு செய்தபோது, உடலில் ஆயுதம் (மண்வெட்டி) கொண்டு தாக்கப்பட்டதற்கான பல காயங்கள் இருப்பது உறுதியானது.
இதனையடுத்து, போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியபோது, சுபாஷ் தனது மகன் சவுரப்பை கொன்றதை ஒப்புக்கொண்டார். மருமகளுடன் இருந்த தகாத உறவைக் கண்டித்ததாலேயே இந்தக் கொலையைச் செய்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். உடனடியாக போலீசார் சுபாஷை கைது செய்து, மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.



