ஈரானில் உள்ள நடன்ஸ் அணு நிலையத்தில் கட்டமைப்பு சேதம் ஏற்பட்டுள்ளது என்பது சமீபத்திய செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்ததில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேதம், அந்த அணு நிலையத்தின் நுழைவுப் பகுதியில் உள்ள கட்டடங்களை பாதித்துள்ளதாக சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) தெரிவித்துள்ளது.
அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், கதிர்வீச்சு கசிவு எதுவும் இல்லை என்றும், முக்கியமான நிலத்தடியில் உள்ள யுரேனியம் செறிவூட்டும் நிலையத்திற்கு கூடுதல் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற 12 நாட்கள் நீடித்த மோதலின்போது, இஸ்ரேல் ஈரானை தாக்கியபோது இந்த நடான்ஸ் அணு நிலையம் ஏற்கனவே கடுமையான சேதத்தை சந்தித்திருந்ததாகவும் சர்வதேச அணுசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது..
அந்த காலகட்டத்தில், இஸ்ரேல் மட்டுமல்லாமல் அமெரிக்கா கூட நடான்ஸ் மற்றும் மேலும் இரண்டு ஈரானிய அணு தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த புதிய தகவல்கள், ஞாயிற்றுக்கிழமை நடந்த கடும் தாக்குதல்களின் போது அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் அணு நிலையங்களை தாக்கியதாக IAEA-வில் ஈரான் தூதர் குற்றம்சாட்டி நிலையில் வெளியாகி உள்ளன..
இதனிடையே, தற்போதைய மோதலுடன் தொடர்புடைய உயிரிழப்புகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களின் தகவலின்படி, இப்போது வரை ஈரானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 787-ஆக உயர்ந்துள்ளது.
மத்திய கிழக்கில் போர் பதற்றம்
மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளது. கடந்த சனிக்கிழமை இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, பிராந்தியத்தில் நிலைமை கடுமையாக மோசமடைந்துள்ளது. இந்த ஒருங்கிணைந்த தாக்குதலில், ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை தளங்கள் மற்றும் பல கடற்படை கப்பல்கள் குறிவைக்கப்பட்டன. இது சமீப ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப் பெரிய ராணுவ உயர்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
நாட்டின் பல பகுதிகளில் பெரும் வெடிச்சத்தங்கள் கேட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைநகர் தெஹ்ரானில், கட்டிடங்கள் குலுங்கியதாகவும், வானில் புகைமேகங்கள் சூழ்ந்ததாகவும் மக்கள் கூறியுள்ளனர். ஈரான் அதிகாரிகளின் தகவலின்படி, இந்த பதற்றம் தொடங்கியதிலிருந்து 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில், ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி மற்றும் பல மூத்த ராணுவ, அரசியல் தலைவர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச தலைவரின் கொலை ஒரு வெளிப்படையான தாக்குதல் என்று ஈரான் அதிகாரிகள் குறிப்பிட்டதுடன், இதற்கு கடுமையான பதிலடி அளிக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளனர்.
இந்த மோதல், ஈரானின் எல்லைகளைத் தாண்டி ஏற்கனவே பரவி விட்டது. ஈரான் பல வளைகுடா நாடுகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஐக்கிய அரபு அமீரகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாகும். அங்கு துபாய் விமான நிலையம், புர்ஜ் கலிஃபா ஆகியவை தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களும் இந்த விரிவடைந்த மோதலில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் திங்கட்கிழமை கருத்து தெரிவிக்கையில், ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க முயற்சித்து வருவதாகவும், அமெரிக்காவும் மத்திய கிழக்கும் பாதுகாப்பாக இருக்க அதைத் தடுக்க வேண்டியது அவசியம் என்றும் கூறினார். மேலும், ஈரானுக்கு எதிராக இன்னும் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும், இந்தப் போர் 4 முதல் 5 வாரங்கள் வரை நீடிக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.
இந்த நிலைமை, ஈரான்–அமெரிக்கா–இஸ்ரேல் மோதல் மேலும் தீவிரமடைந்து வருவதை காட்டுவதுடன், பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பு குறித்து கடும் கவலைகளை உருவாக்கியுள்ளது.



