சென்னையில் இந்த ஆண்டின் முதல் மேகவெடிப்பு (Cloudburst) சம்பவம் பதிவாகியுள்ளது. ஒரு மணி நேரத்தில் 100 மிமீட்டருக்கும் மேல் மழை கொட்டியதால், பல பகுதிகளில் சாலைகள் சில நிமிடங்களில் வெள்ளம் சூழ்ந்தன.
இதுகுறித்து வானிலை ஆர்வலரும், ‘தமிழ்நாடு வெதர்மேன்’ என அழைக்கப்படும் பிரதீப் ஜான், சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு, “வடக்கு மற்றும் வடமேற்கு சென்னையில் ஏற்கனவே கனமழை தாக்கியுள்ள நிலையில், அடுத்ததாக தென்சென்னையும் அதேபோல பலத்த மழையை சந்திக்க வாய்ப்புள்ளது. தற்போது பெய்துள்ள மழை இது இந்தாண்டில் சென்னையில் ஏற்பட்ட முதல் மேகவெடிப்பு” என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேசமயம், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேற்கு திசை காற்றின் வேக மாற்றம் காரணமாக, ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய நாட்களில் தமிழகத்தின் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீசும் என்றும், கடலோரப்பகுதிகளில் இடையிடையே 60 கிமீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 2 முதல் 5 ஆம் தேதி வரை மாநிலத்தின் சில பகுதிகளில் மழை தொடரும் வாய்ப்பு இருப்பதாகவும், அதேசமயம், இன்று தமிழகத்தின் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகரிக்கக்கூடும் எனவும் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டு, சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு திடீரென பெய்த கனமழையால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இரவு 11 மணியளவில் துவங்கிய மழை எழும்பூர், வடபழனி, கிண்டி, தியாகராயநகர், அண்ணாநகர் போன்ற பகுதிகளில் பலத்த வேகத்தில் பெய்தது.
இதேபோல், காஞ்சிபுரம், பொன்னேரி, கூடலூர் உள்ளிட்ட இடங்களிலும் விடிய விடிய கனமழை தொடர்ந்து கொட்டியதால் சாலைகள் பல இடங்களில் நீர்மூழ்கியது. சென்னையின் மணலி, மாதவரம், திருவொற்றியூர், அம்பத்தூர், ஆவடி பகுதிகளில் மழை மேகவெடிப்பு போலப் பொழிந்தது.
Read More : தவெக கொடியை ஏந்தி விஜய்க்கு ஆதரவு கொடுத்த பவன் கல்யாண்..!! உண்மை என்ன..? வைரலாகும் வீடியோ..!!