நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஒன்றியம், சோழர் நாடு ஊராட்சிப் பகுதியில் விவசாயி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவர் பள்ளிக்குழிப்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (55).
விவசாயியான இவருக்கு விஜயகுமார் என்ற மகன் உள்ளார். இவர்கள் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்த நிலையில், செல்வராஜின் வீட்டுக்கு இவர்களது உறவினர் காசி துரைசாமி என்பவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது, துரைசாமிக்கும் செல்வராஜின் மருமகளான விஜயகுமாரின் மனைவி சந்திராவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இந்த விவகாரத்தை அறிந்த விஜயகுமார் மனவருத்தத்துடன் தனது தந்தை செல்வராஜிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். மகனை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பிய செல்வராஜ், காசி துரைசாமியை கடுமையாக கண்டித்துள்ளார். மருமகளுடனான உறவை நிறுத்திக்கொள்ளுமாறு அவர் பலமுறை வலியுறுத்தியும், துரைசாமி அதை காதில் போட்டுக்கொள்ளவே இல்லை.
இந்நிலையில், பள்ளிக்குழிப்பட்டி அருகே செல்வராஜ் மது அருந்திக் கொண்டிருந்தபோது, அதே வழியாக மது அருந்திவிட்டு வந்த துரைசாமியை அவர் மீண்டும் அழைத்து, மருமகளுடனான கள்ளக்காதலை கைவிட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, அது அடிதடியாக மாறியது.
அப்போது ஆத்திரமடைந்த காசி துரைசாமி, அருகே இருந்த விறகு கட்டையை எடுத்து செல்வராஜின் தலையில் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், காசி துரைசாமியை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



