வருமான வரி தாக்கல் செய்வதற்கான (ITR) காலக்கெடு செப்.16ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், நள்ளிரவு 12 மணியுடன் காலக்கெடு முடிந்தது. தணிக்கைக்கு உட்படாத தனிநபர் வரி செலுத்துவோருக்கான காலக்கெடு முன்னதாக ஜூலை 31 ஆக இருந்தது. ஆனால், தொழில்நுட்பப் பிரச்சனைகள் காரணமாக, அந்தக் காலக்கெடு செப்.15 ஆக நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையே, மீண்டும் புகார் எழுந்ததால் இந்த கெடு செப்.16ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. ஆனால், தற்போது அந்த காலக்கெடு முடிந்தது.
எனவே இனி புதிதாக ஐ.டி.ஆர். தாக்கல் செய்பவர்கள் அபராதம் செலுத்தியே தாக்கல் செய்ய முடியும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. புதிதாக தாக்கல் செய்பவர்களை கால தாமதம் என்றே வருமான வரித்துறை கணக்கில் எடுத்துக் கொள்ளும்.
காலக்கெடுவை தாண்டி கணக்கு தாக்கல் செய்தால், பல்வேறு அபராதங்கள் விதிக்கப்படும். பிரிவு 234A-இன் கீழ், ஒவ்வொரு மாதமும் 1% வட்டி விதிக்கப்படும். இது தவிர, ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.5,000 அபராதமும், அதற்கு குறைவாக வருமானம் உள்ளவர்களுக்கு ரூ.1,000 அபராதமும் விதிக்கப்படும்.
வருமான வரி தாக்கல் செய்ய, வரி செலுத்துவோர் முதலில் வருமான வரி போர்ட்டலில் உள்நுழைந்து, சரியான படிவத்தைத் தேர்ந்தெடுத்து, விவரங்களை பூர்த்தி செய்து, வரியை செலுத்தி, சமர்ப்பித்த பிறகு இ-வெரிஃபிகேஷன் செய்ய வேண்டும்.