ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் குழந்தை பவுடரை வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தியதால் புற்றுநோய் ஏற்பட்டதாக குற்றம் சாட்டிய மறைந்த பெண்மணியின் குடும்பத்திற்கு, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் $966 மில்லியன் (சுமார் ரூ. 8,574 கோடி) அபராதம் செலுத்த உத்தரவிட்டுள்ளது. இது, கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கில், ஒரே பயனருக்காக வழங்கப்பட்ட மிகப் பெரிய அபராதத் தொகை ஆகும்.
மே மூர் (Mae Moore) என்பவரின் மெசோதெலியோமா (Mesothelioma) புற்றுநோய்க்கு ஜே&ஜே நிறுவனமே பொறுப்பு என்று நீதிமன்றம் அறிவித்தது. மூர் கடந்த 2021ஆம் ஆண்டு தனது 88 வயதில் காலமானார். அவரது குடும்பத்தினர், ஜே&ஜே நிறுவனம் தங்கள் ஐகானிக் பவுடரின் சுகாதார அபாயங்களை மறைத்ததாக குற்றம் சாட்டிய நிலையில், இந்த அபராதத் தொகை அவரது குடும்பத்துக்குச் சென்றடையும்.
இந்நிலையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து உடனடியாக மேல்முறையீடு செய்யப்போவதாக ஜே&ஜே நிறுவனம் அறிவித்துள்ளது. மற்ற வழக்குகளில் நிறுவனமே வெற்றி பெற்றிருக்கும் நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து நாங்கள் உடனடியாக மேல்முறையீடு செய்வோம் என்று ஜே&ஜே நிறுவனத்தின் உலகளாவிய வழக்குகளின் துணைத் தலைவர் எரிக் ஹாஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மூர் குடும்பத்தின் சார்பில் வாதாடிய டெக்சாஸை சேர்ந்த வழக்கறிஞர் ஜெசிகா டீன் கூறுகையில், “இந்தக் குடும்பம் தங்கள் வழக்கை நீதிமன்றத்திற்கு கொண்டு வர 5 ஆண்டுகள் ஆனது. ஜே&ஜே பொறுப்பேற்க வேண்டும் என்று நீதிமன்றம் முடிவெடுத்தது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார். ஜே&ஜே நிறுவனம் ஏற்கெனவே, தங்கள் குழந்தை பவுடரில் உள்ள அஸ்பெஸ்டாஸ் பயனர்களுக்குத் தீங்கு விளைவிப்பதாகக் கூறப்படும் வழக்குகளைச் சமரசம் செய்ய $3 பில்லியனுக்கும் அதிகமாகச் செலவிட்டுள்ளது. இருப்பினும், நிறுவனம் இன்னும் 70,000-க்கும் அதிகமான வழக்குகளை எதிர்கொண்டுள்ளது.
Read More : இட்லி மாவை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்துறீங்களா..? ஆரோக்கியத்திற்கு நல்லதா..? இல்லத்தரசிகளே இதை படிங்க..!!



