‘ரைசிங் ஸ்டார்’ ஆசிய கோப்பை 7 வது சீசனில் 32 பந்துகளில் அதிவேகமாக சதமடித்த வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்தால் 148 ரன்கள் வித்தியாசத்தில் UAE அணியை வீழ்த்தி இந்தியா ஏ அணி வெற்றிபெற்றுள்ளது.
கத்தார் தலைநகர் தோஹாவில், இளம் வீரர்களுக்கான ‘ரைசிங் ஸ்டார்’ ஆசிய கோப்பை (‘டி-20’) 7வது சீசன் நடக்கிறது. இந்தியா ‘ஏ’, இலங்கை ‘ஏ’, வங்கதேசம் ‘ஏ’, ஓமன், ஹாங்காங் உள்ளிட்ட 8 அணிகள், இரு பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. ‘பி’ பிரிவு லீக் போட்டியில் இந்தியா ‘ஏ’, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,) அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த இந்தியா ‘ஏ’ அணிக்கு பிரியான்ஷ் ஆர்யா (10) சோபிக்கவில்லை. நமன் திர் (34) ஓரளவு கைகொடுத்தார். முதல் பந்தில் ‘அவுட்’ வாய்ப்பில் இருந்து தப்பிய 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி, சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். இவர், 32 பந்தில் சதத்தை எட்டினார். அபாரமாக ஆடிய சூர்யவன்ஷி, 42 பந்தில், 144 ரன் (15×6, 11×4) குவித்தார். அடுத்து வந்த கேப்டன் ஜிதேஷ் சர்மா, தன்பங்கிற்கு அரைசதம் கடந்தார். நேஹல் வதேரா (14) நிலைக்கவில்லை.
இந்தியா ‘ஏ’ அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 297 ரன் எடுத்தது. ஜிதேஷ் 32 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இது டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஐந்தாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். டி20 கிரிக்கெட் வரலாற்றில், நேபாளம், ஜிம்பாப்வே மற்றும் இங்கிலாந்து மட்டுமே 300 ரன்களைக் கடந்துள்ளன. இந்தியா பவுண்டரிகள் மூலம் மட்டுமே 246 ரன்கள் எடுத்தது. வைபவ் சூர்யவன்ஷி அதிக சிக்ஸர்கள் (15) அடித்தார், அதே நேரத்தில் ஜிதேஷ் சர்மாவும் ஆறு சிக்ஸர்களுடன் தனது சாதனையை வெளிப்படுத்தினார்.
32 பந்தில் சதம் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி, ‘டி-20’ வரலாற்றில் அதிவேக சதமடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தை ரிஷாப் பன்ட் (டில்லி, 2018, எதிர்: இமாச்சல பிரதேசம்) உடன் பகிர்ந்து கொண்டார். முதலிடத்தை, தலா 28 பந்தில் சதம் விளாசிய உர்வில் படேல் (குஜராத், 2024, எதிர்: திரிபுரா), அபிஷேக் சர்மா (பஞ்சாப், 2024, எதிர்: மேகாலயா) பகிர்ந்து கொண்டுள்ளனர்.
கடின இலக்கை விரட்டிய யு.ஏ.இ., அணி 20 ஓவரில், 149/7 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. சோஹைப் கான் 63 ரன் விளாசினார். இந்தியா ‘ஏ’ அணி சார்பில் குர்ஜப்னீத் சிங் 3, ஹர்ஷ் துபே 2 விக்கெட் கைப்பற்றினர்.
Readmore: சிவனும் பெருமாளும் ஒரே இடத்தில்.. பிள்ளை வரம் அருளும் பூலோகநாதர் ஆலயம்..! எங்க இருக்கு தெரியுமா..?



