அமெரிக்காவின் டெக்சாஸைத் தாக்கிய திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளதாகவும் மேலும் பலர் காணாமல் போயுள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இப்பகுதியில் அதிக மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் அபாயம் உள்ளதால், சேறு நிறைந்த ஆற்றங்கரைகளில் தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தெற்கு – மத்திய டெக்சாஸில் உள்ள குவாடலூப் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட வெள்ளபெருக்கில் பலர் அடித்து செல்லப்பட்ட நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட இடத்தில் முகாம் ஒன்று இருந்துள்ளது. இதனால் முகாமில் இருந்த 20க்கும் மேற்பட்ட சிறுமிகள் மாயமாகினர். அவர்களைத் தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்றது. இதனையடுத்து ஹெலிகாப்டர்கள், படகுகள் மற்றும் டிரோன்கள் மூலம் கண்டறிந்து காணாமல் போனவர்களை மீட்கும் பனி முழு வீச்சில் நடைபெற்று வந்தது. மேலும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 51 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிறுமிகள் உள்ளிட்டோரின் உடல்கள் கரை ஒதுங்கி உள்ளது. இதனால் டெக்சாஸ் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
பல மாவட்டங்களில் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்கும் சேதத்தை மதிப்பிடுவதற்கும் அவசரகால குழுக்கள் 24 மணி நேரமும் உழைத்து வருவதாக சிபிஎஸ் செய்தி தெரிவித்துள்ளது. மேலும் பல பகுதிகள் அணுகப்பட்டு தேடுதல் முயற்சிகள் தொடர்வதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் வரும் நாட்களில் கூடுதல் மழைப்பொழிவு நிலைமைகளை மோசமாக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.