டெல்லி கார் வெடிப்பு வழக்கு விசாரணையில், பாதுகாப்பு அமைப்புகள் முக்கியமான தகவலை கண்டறிந்துள்ளன. சமீபத்தில் கைது செய்யப்பட்ட தங்கள் கூட்டளிகள் மற்றும் ஹரியானாவின் பாரிதாபாத் (Faridabad) பயங்கரவாத நெட்வொர்க் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, பயங்கரவாதிகள் பதட்டமடைந்து டெல்லியில் வெடிப்பை நிகழ்த்தியதாகத் தெரிகிறது.
அந்த பயங்கரவாதிகள் டெல்லி நகரில் உள்ள முக்கிய அரசு மற்றும் பாதுகாப்பு நிலையங்களைத் தாக்க திட்டமிட்டிருந்தனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் சேனா பவன் (Sena Bhavan), ஏர்போர்ஸ் அலுவலகம் (Air Force Office), பாஜக தலைமையகம் (BJP Office) மற்றும் பாராளுமன்ற சாலை பகுதி (Parliament House Road) ஆகியவை அடங்கும்.
மேலும், டெல்லி மட்டுமின்றி, அயோத்தியில் உள்ள இராமர் கோவில் மற்றும் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் ஆகியவையும் அவர்களின் தாக்குதல் இலக்குகளில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெல்லி வெடிப்பு வழக்கில் இதுவரை சுமார் 1,500 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது.
மத்திய உள்துறை மற்றும் உளவுத்துறை அமைப்புகள் தற்போது பயங்கரவாதிகளின் தொடர்பு நெட்வொர்க், நிதி ஆதாரங்கள் மற்றும் தூங்கிக்கிடக்கும் குழுக்களின் (sleeper cells) இணைப்புகளை தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன.
விசாரணையின் போது, தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்ட டாக்டர் உமர், மிக அதிக அளவிலான வெடிமருந்துகளைப் பயன்படுத்துவதற்கான போதிய பொருட்கள் அவரிடம் இல்லையெனவும், அதனால் செங்கோட்டை பகுதியில் ஏற்பட்ட வெடிப்பு மிக அதிக தீவிரத்துடன் நடக்கவில்லை, அது ஒரு தவறின் காரணமாக ஏற்பட்டது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் பயங்கரவாதிகள் மிகப்பெரிய அளவில் அமோனியம் நைட்ரேட்டை (Ammonium Nitrate) சேகரித்திருந்ததும், கடந்த 30 நாட்களில் டெல்லி வெடிப்புக்கான வெடிமருந்துகள் தயாரிக்கப்பட்டிருந்தன என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் ஷாஹீன் அவர்களின் மொபைல் மெசேஜ் உரையாடல்களில் முக்கிய சான்றுகள் கிடைத்துள்ளன. அவர் வெடிப்பை குறிக்க “தாவத்” (Dawat) எனவும், வெடிமருந்தை குறிக்க “பிரியாணி” (Biryani) எனவும் குறியீட்டு சொற்களை பயன்படுத்தியிருந்தார்.
அவரது ஒரு செய்தியில், “அதாவது வெடிப்புக்கான வெடிமருந்து தயாராகி விட்டது
என்று குறிப்பிடப்பட்டிருந்தது என விசாரணை அமைப்புகள் உறுதி செய்துள்ளன. அந்த குறியீட்டு மொழி மூலம் பயங்கரவாதக் குழுவினர் ஒருவருக்கொருவர் தகவல் பரிமாறிக்கொண்டிருந்ததாகவும், இந்த தகவல்கள் தற்போது உளவு அமைப்புகள் மூலம் டிகோட் (decode) செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.
டெல்லி செங்கோட்டை அருகே ஏற்பட்ட கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. இது ஜெய்ஷ்-இ-முகம்மது தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய மாட்யூலாக (module) இருப்பதாக இந்திய புலனாய்வு அமைப்புகள் உறுதி செய்துள்ளன.
இந்த கார் வெடிப்பு, ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் நௌகம் போலீஸ் போஸ்ட் வரம்பில் அக்டோபர் 19 அன்று கண்டுபிடிக்கப்பட்ட விவாதத்துக்குரிய போஸ்டர்கள் சம்பவத்துடன் தொடர்புடையது என தெரியவந்துள்ளது. அந்த வழக்கில் அன்றே எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டிருந்தது.
விசாரணையின் போது, சோபியானில் இருந்து மௌலவி இர்ஃபான் அகமது வகாய் மற்றும் கந்தர்பாலில் இருந்து சமீர் அகமது ஆகியோர் அக்டோபர் 20 முதல் 27 வரை கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, நவம்பர் 5 அன்று உத்தரப்பிரதேசத்தின் சஹாரன்பூரில் டாக்டர் அதீல் கைது செய்யப்பட்டார். நவம்பர் 7 அன்று அனந்த்நாக் மருத்துவமனையில் இருந்து AK-56 துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, நவம்பர் 8 அன்று ஃபரிதாபாத் அல்-பலாஹ் மருத்துவக் கல்லூரியில் இருந்து பிஸ்டல்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டன. இதையடுத்து அக்கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் முஜம்மில் கைது செய்யப்பட்டார்.
பின்னர், நவம்பர் 9 அன்று ஃபரிதாபாத் தௌஜ் பகுதியைச் சேர்ந்த மதராசி எனும் நபர் கைது செய்யப்பட்டார். நவம்பர் 10 அன்று மிவாட் பகுதியில் உள்ள தேரா காலனியில் அல்-பலாஹ் பள்ளிவாசலின் இமாம் ஹபீஸ் முகம்மது இஷ்தியாக் வீட்டில் 2,563 கிலோ வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதோடு 358 கிலோ வெடிமருந்துகள், டெட்டனேட்டர்கள் மற்றும் டைமர்களும் கைப்பற்றப்பட்டன.
மொத்தத்தில், இதுவரை சுமார் 3,000 கிலோ வெடிமருந்துகள் மற்றும் குண்டு தயாரிப்பு உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விசாரணை தற்போது நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதுடன், மேலும் சில இடங்களில் தேடுதல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Read More : 26/11 பாணி தாக்குதல், 200+ IEDகள்: டெல்லி வெடிப்பு சம்பவத்தில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்..



