டெல்லியின் செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் வெடிப்புக்கு 3 வாரங்களுக்கு முன்பு, தீவிரவாத அமைப்பு ஜெயிஷ் இ அகமது அமைப்பை ஆதரிக்கும் போஸ்டர்கள் இன்காஷ்மீரின் ஸ்ரீநகர் நகரில் பல இடங்களில் ஒட்டப்பட்டிருந்தன. இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் போலீசார் விசாரணை தொடங்கினர். அந்த விசாரணை உத்தரப்பிரதேசம், ஹரியானா மற்றும் தேசிய தலைநகரம் டெல்லி வரை விரிந்தது.
இந்த விசாரணையின் மூலம், தீவிரவாத ஆட்சேர்ப்பு முறையில் ஏற்பட்ட ஒரு முக்கியமான மாற்றம் வெளிச்சத்துக்கு வந்தது. அதனை ஜம்மு காஷ்மீர் போலீசார் “வெள்ளை காலர் தீவிரவாத ஈகோசிஸ்டம்” (White Collar Terror Ecosystem) என விவரித்தனர்.. அதாவது கல்வியாளர்கள், தொழில்முனைவோர், மற்றும் மாணவர்கள் ஆகியோரின் மூலம் மறைமுகமாக நடைபெறும் தீவிரவாத வலையமைப்பு என கூறப்படுகிறது.
நேற்று மாலை டெல்லி செங்கோட்டைக்கு அருகே ஏற்பட்ட கார் வெடிப்பில் 9 பேர் உயிரிழந்து, 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக 3 காஷ்மீரி மருத்துவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அதீல் அஹ்மத் ராதர், முஜம்மில் ஷகீல் மற்றும் உமர் முகம்மது ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தரபிரதேசத்தின் சஹரன்பூர் மற்றும் ஹரியானாவின் பரிதாபாத் பகுதிகளில் ராதர் மற்றும் ஷகீல் ஆகியோர் கைது செய்யப்பட்டதை அடுத்து, குண்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட மிகப் பெரிய அளவிலான வெடிமருந்து பொருட்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு அமைப்புகளின் தகவலின்படி, ஹரியானாவின் பரிதாபாத் பகுதியில் உள்ள இரண்டு அறைகளில் மீட்கப்பட்ட 2,900 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு பொருள் அமோனியம் நைட்ரேட் (Ammonium Nitrate) என சந்தேகிக்கப்படுகிறது.
ஆரம்பக்கட்ட விசாரணைகளில், இதே இரசாயனம் டெல்லி செங்கோட்டை அருகே ஏற்பட்ட வெடிவிபத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன…
நேற்று மாலை 6.52 மணியளவில், செங்கோட்டை அருகே உள்ள போக்குவரத்து சிக்னலில் ஒரு வெள்ளை நிற ஹூண்டாய் i20 கார் நின்றிருந்தது. இந்த போக்குவரத்து சிக்னல் நேதாஜி சுபாஷ் மார்க்கில் உள்ளது. ஒரு பக்கம் செங்கோட்டை, மறுபுறம் சாந்தினி சவுக். திடீரென்று, ஒரு சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.. இதனால் அந்த காரும் அருகில் இருந்த கார்களும் வெடித்து சிதறியது..
இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் “மிகப்பெரிய தீப்பந்தம் போல எரிவாயு வெடித்தது” என்று கூறினர். தீயணைப்பு பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்; சுமார் 15 தீயணைப்பு வாகனங்கள் அரைமணி நேர போராட்டத்திற்குப் பிறகே தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன.
இந்த வெடிப்பு, இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவத்துக்குப் பிறகு 12 மணிநேரத்துக்குள், பல்வேறு பாதுகாப்பு அமைப்புகள் இணைந்து இந்த கார் வெடிப்புக்கு பின்னணியில் உள்ள சதித் திட்டம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன..
வெடிப்புக்குப் பிறகு, போலீசார் HR26CE7674 என்ற பதிவெண் கொண்ட i20 காரின் உரிமை விவரங்களை தேடினர். அந்த கார் சல்மான் என்பவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. விசாரணையில் சல்மான், அந்த காரை இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தேவேந்தர் என்பவருக்கு விற்றதாக தெரிவித்தார். பின்னர் அந்த கார் ஆமிர், அதன்பின் தாரிக், இறுதியாக டாக்டர் உமர் முகம்மது என பலரது கைகளில் மாறியதாக போலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதீலின் நெருங்கிய கூட்டாளியான உமர், முன்னதாக போஸ்டர் வழக்கில் கைது செய்யப்பட்டவர். தற்போது, வெடிப்பு நிகழ்ந்தபோது காரை ஓட்டியவர் உமர் தான் என்று சந்தேகிக்கப்படுகிறது. வெடிப்பிற்கு முன் பதிவான CCTV காட்சியில் உமரின் முகத்தின் ஒரு பகுதி தெளிவாக காணப்படுகிறது. இதை உறுதிப்படுத்துவதற்காக, கார் ஓட்டுனரின் அடையாளத்தை உறுதி செய்ய போலீசார் DNA பரிசோதனை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
தீவிரவாத வழக்கு மற்றும் பரபரப்பை ஏற்படுத்திய கோணங்கள்
மத்திய மற்றும் மாநில அதிகாரிகள் இதுவரை “தீவிரவாத தாக்குதல்” என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை என்றாலும், போலீசார் சட்டவிரோதச் செயல்கள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.. இது பெரும்பாலும் தீவிரவாத வழக்குகளில் பயன்படுத்தப்படும் சட்டம் ஆகும்.
நேற்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார். அதே நேரத்தில், தேசிய தீவிரவாத தடுப்பு நிறுவனம் (NIA) விரைவில் இந்த வழக்கிற்கு பொறுப்பேற்று முழுமையான விசாரணை நடத்தும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உமர் பீதியடைந்து தற்கொலைத் தாக்குதல் நடத்தினாரா? என்ற கோணத்தில் தற்போது விசாரணை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதுகாப்பு அமைப்புகள் மேற்கொண்ட விசாரணையில், அதீல் மற்றும் முஸம்மில் ஆகியோர் மூலம் 2,900 கிலோ வெடிபொருள் தயாரிக்கும் பொருட்கள், மேலும் தாக்குதல் துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகள் போன்ற நவீன ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவை அனைத்தும், செங்கோட்டைக்கு அருகே நடந்த வெடி விபத்துடன் தொடர்புடைய முக்கிய ஆதாரங்களாக தற்போது கருதப்பட்டு வருகின்றன.
தனது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டதும், 2,900 கிலோ வெடிபொருள் தயாரிக்கும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதும், பீதியடைந்த உமர், வெடிகுண்டு வாகனத்தில் தற்கொலைத் தாக்குதல் நடத்த தீர்மானித்திருக்கலாம் என்ற கோணத்தில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த கோணத்தில் பாதுகாப்பு அமைப்புகள் சிசிடிவி காட்சிகள், கைப்பேசி பதிவுகள் மற்றும் டிஎன்ஏ சோதனைகள் உள்ளிட்ட பல ஆதாரங்களைப் பரிசோதித்து வருகின்றன.
புதிய தலைமுறை தீவிரவாத முகங்கள்? — மருத்துவர்கள் சம்பந்தப்பட்ட அதிர்ச்சி தகவல்
டெல்லி செங்கோட்டை அருகே வெடித்த கார் குண்டு வழக்கில் உமர், அதீல், மற்றும் முஜம்மில் எனும் மூவரும் மருத்துவர்கள் என வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதில், டாக்டர் அதீல் அஹ்மத் ரதர், அனந்த்நாக் அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி பின்னர் உத்தரப் பிரதேசத்தின் சஹரன்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியில் சேர்ந்திருந்தார்.
டாக்டர் முஜம்மில் ஷகீல், கடந்த 3 ஆண்டுகளாக ஹரியானாவின் அல் பலாஹ் மெடிக்கல் சயன்ஸ் & ரிசர்ச் சென்டர்-இல் மூத்த ரெசிடென்ட் மருத்துவராக பணியாற்றி வந்தார். அவரது சக பணியாளர் லக்னோவைச் சேர்ந்த டாக்டர் ஷாஹீன் ஷாஹித், தன் காரில் ஆயுதங்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், டாக்டர் உமர் முகமது தான் தற்கொலைத் தாக்குதலை நடத்தி இருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் நம்புகின்றனர். இந்த வழக்கின் மூலம், “வெள்ளை காலர் தீவிரவாதம்” என அழைக்கப்படும் புதிய வகை தீவிரவாதச் சுற்றுச்சூழல் வெளிப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைப்புகள் கூறுகின்றன.
“வெள்ளை காலர்” தீவிரவாதம் — புதிய ஆபத்தான மாற்றம்
மிகுந்த கல்வியறிவு பெற்ற மருத்துவர்கள் போன்ற தொழில்முறை நபர்கள் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவது, தீவிரவாத அமைப்புகள் தங்கள் ஆட்களை தேர்வு செய்வதில் அடிப்படை மாற்றத்தை வெளிப்படுத்துகிறது என்று பாதுகாப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
ஜம்மு காஷ்மீர் போலீசார் பேசிய போது, இந்த “வெள்ளை காலர் தீவிரவாதக் குழு” தங்கள் செயல்பாடுகளுக்காக குறியாக்கப்பட்ட (encrypted) ஆன்லைன் வழிகள் மூலம் தொடர்பு கொண்டது. இதன் மூலம் பயிற்சி, நிதி பரிமாற்றம் மற்றும் தளவாட ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்பட்டது.
அதேபோல், இந்த குழு சமூக மற்றும் தொண்டு நடவடிக்கைகள் என்ற பெயரில், தொழில்முறை மற்றும் கல்வி வலையமைப்புகளின் வழியாக நிதி திரட்டியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாதுகாப்பு அதிகாரிகள் இதை இந்தியாவில் தீவிரவாதம் மேற்கொள்ளும் புதிய “அறிவுஜீவி மையம் கொண்ட” அச்சுறுத்தல் என எச்சரித்துள்ளனர்.
விசாரணையில், கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட்டிருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று போலீஸ் தெரிவித்துள்ளது.
அவர்கள் புதிய நபர்களை அடையாளம் காண்பது, அவர்களை மனப்போக்கில் தீவிரப்படுத்தி (radicalise), பின்னர் தீவிரவாத அமைப்புகளில் சேர்க்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும், அவர்கள் நிதி திரட்டல், தளவாட வசதிகளை ஏற்பாடு செய்தல், துப்பாக்கி, வெடிகுண்டு மற்றும் IED (Improvised Explosive Device) தயாரிக்க தேவையான பொருட்களை வாங்கி வழங்கும் பணிகளிலும் ஈடுபட்டிருந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் ஒருங்கிணைந்த முறையில், “வெள்ளை காலர்” தீவிரவாத வலையமைப்பின் பாகமாக நடைபெற்று வந்ததாகவும் போலீசார் கூறியுள்ளனர்.



