டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு தொடர்பான டிஎன்ஏ சோதனையில், தாக்குதல் நடத்தியவர் காஷ்மீர் மருத்துவர் உமர் உன் நபி என்பது தெரியவந்தது, அவர் ஜெய்ஷ்-இ-முகமதுவின் தளவாடப் பிரிவுடன் தொடர்புடையவர்.
நவம்பர் 10 ஆம் தேதி டெல்லியின் வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டை அருகே நடந்த மிகப்பெரிய கார் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 12 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில், குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர் உமர் முகமது நபி என்பதும், அவர் ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த 35 வயது மருத்துவர் என்பதும் தெரியவந்தது . மேலும், இவர், அனந்த்நாக்கில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகப் பணியாற்றி வந்துள்ளார். இதே மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக பணியாற்றி வந்த அதீல் அகமது ராதர் என்பவரும் இவரும் நண்பர்களாக இருந்துள்ளனர். அதீல் அகமது ராதர், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்புடனும் மற்றொரு உள்ளூர் மதவாத அமைப்புடனும் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்துள்ளார்.
புல்வாமாவை சேர்ந்தவரும் உமர் முகமது நபியின் நெருங்கிய நண்பருமான மருத்துவர் முஜம்மில், டெல்லிக்கு அருகே ஃபரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். அனந்த்நாக் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த உமர் முகமது நபியும், இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாறியுள்ளார்.
உமர் முகமது நபி, மிகவும் அமைதியானவர் என்றும் படிப்பில் அதிக ஈடுபாடு கொண்டவர் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மருத்துவர்களான மூவரும் ஜெய்ஷ் இ முகமது அமைப்புடன் இணைந்து ‘ஒயிட் காலர் பயங்கரவாத நெட்ஒர்க்’-கை கட்டமைத்துள்ளனர். மேலும், இந்தியாவின் பல இடங்களில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தும் நோக்கில் ஏராளமான வெடிபொருட்களை ஃபரிதாபாத்தில் பதுக்கி உள்ளனர். புலனாய்வுப் பிரிவினர் இதைக் கண்டுபிடித்து, கடந்த 9-ம் தேதி ஃபரிதாபாத்தில் சோதனை நடத்தினர். இதில், 2,900 கிலோ அம்மோனியம் நைட்ரேட், டெட்டனேட்டர்கள், டைமர்கள் மற்றும் துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.
குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உமர் உன் நபியும் ஒருவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அவரது குடும்ப உறுப்பினர்களும் டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதனடிப்படையில் தற்போது குண்டுவெடிப்பு தொடர்பான டிஎன்ஏ சோதனையில், தாக்குதல் நடத்தியவர் காஷ்மீர் மருத்துவர் உமர் உன் நபி என்பது தெரியவந்துள்ளது. குண்டுவெடிப்பில் இறந்த காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் டாக்டர் உமர் உன் நபி தான் குற்றவாளி என்பதை விசாரணை நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.



