மத்திய பட்ஜெட் 2026-27 தமிழகத்திற்கு பெரும் ஏமாற்றத்தையே அளித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டாவது தமிழகத்தின் கோரிக்கைகள் செவிமடுக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், மத்திய அரசு மீண்டும் ஒருமுறை ‘மாற்றாந்தாய் மனப்பான்மையுடன்’ நடந்து கொண்டுள்ளதாக அவர் தனது அறிக்கையில் சாடியுள்ளார். வரிப்பகிர்வு முதல் கிராமப்புற வளர்ச்சித் திட்டங்கள் வரை அனைத்திலும் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளதை அவர் புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாநிலங்களுக்கான வரிப்பகிர்வை 41 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை மத்திய அரசு முற்றிலுமாகப் புறக்கணித்துள்ளது. குறிப்பாக, நாட்டின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள தமிழகத்திற்கு, 16-ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி வெறும் 4.097 விழுக்காடு மட்டுமே வரிப்பகிர்வு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்திற்கு ஆண்டுக்குச் சுமார் 5,000 கோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்படும் என முதலமைச்சர் கவலை தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி சீரமைப்பால் ஏற்கனவே வருவாய் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மத்திய வரிகளின் பங்கிலும் சுமார் 1,200 கோடி ரூபாய் குறைக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசின் முக்கிய திட்டங்களான ஜல் ஜீவன் குடிநீர்த் திட்டம் மற்றும் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றிற்கு அறிவிக்கப்பட்ட நிதியை விட, திருத்திய மதிப்பீட்டில் பல ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு குறைத்திருப்பதை முதலமைச்சர் அம்பலப்படுத்தியுள்ளார். குறிப்பாக, 67 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த ஜல் ஜீவன் திட்ட நிதி, தற்போது 17 ஆயிரம் கோடியாகக் குறைக்கப்பட்டிருப்பது அத்திட்டத்தையே முடக்கும் முயற்சி என்று அவர் விமர்சித்துள்ளார். அதேபோல், இளைஞர்களுக்காகப் பெரும் ஆரவாரத்துடன் அறிவிக்கப்பட்ட ‘PM Internship Scheme’ திட்டத்திற்கு 10,831 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக கூறிவிட்டு, தற்போது வெறும் 526 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியிருப்பது அத்திட்டத்தின் படுதோல்வியை காட்டுவதாக அவர் சாடியுள்ளார்.
கல்வி மற்றும் குடிநீர்த் திட்டங்களுக்காகத் தமிழகம் கோரியிருந்த சுமார் 6,660 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை விடுவிப்பது குறித்து பட்ஜெட்டில் எந்தத் தகவலும் இல்லாதது தமிழக மக்களை வஞ்சிக்கும் செயல் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மும்மொழிக் கொள்கையை ஏற்காததால் கல்வித் துறைக்கான நிதி நிறுத்தப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வழக்கமாக பட்ஜெட் உரையில் இடம்பெறும் ‘திருக்குறள்’ கூட இந்த முறை இடம்பெறவில்லை என்பதைக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தின் மீதான பாஜக அரசின் அலட்சியப் போக்கு இந்த நிதிநிலை அறிக்கையின் மூலம் வெட்டவெளிச்சமாகி இருப்பதாகவும், இது ஒட்டுமொத்தத்தில் “ஏமாற்றம்! ஏமாற்றம்! ஏமாற்றம்!” என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.



