வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்ற திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் இலக்கினை நிறைவேற்றும் நோக்கில், அக்கட்சியின் தேர்தல் பணி வியூகங்கள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இதற்கான அடித்தளமாக, மற்ற கட்சிகளில் உள்ள முக்கிய நிர்வாகிகளைத் திமுகவில் இணைக்கும் பணி தமிழ்நாடு முழுவதும் வேகம் எடுத்துள்ளது.
இந்த அதிரடி நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எஸ். மூர்த்தி முன்னிலையில், அதிமுவைச் சேர்ந்த ஏராளமானோர் அக்கட்சியில் இருந்து விலகி, திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
அதிமுக முக்கிய நிர்வாகிகள் அதிருப்தி :
அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்கள் மற்றும் தலைமையின் மீதான அதிருப்தி காரணமாகவே இவர்கள் திமுகவில் இணைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிதாக இணைந்தவர்களை மாவட்டப் பொறுப்பாளர் கே.எஸ். மூர்த்தி வரவேற்று, கட்சியில் அவர்களுக்கு உரிய மரியாதை மற்றும் பொறுப்புகள் வழங்கப்படும் என உறுதியளித்தார்.
திமுக தலைவர் ஸ்டாலின் நிர்ணயித்துள்ள 200+ இலக்கை அடைவதற்கு, பிற கட்சிகளில் இருந்து புதிய உறுப்பினர்களைக் கட்சியில் சேர்ப்பது ஒரு முக்கிய உத்தியாகப் பார்க்கப்படுகிறது. இத்தகைய இணைப்புகள், நாமக்கல் மாவட்டத்தில் மட்டுமல்லாமல், மாநிலத்தின் பிற பகுதிகளிலும் வலுவாகத் தொடரும் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான பணிகளை அக்கட்சி இப்போதே முனைப்புடன் செய்து வருகிறது.



