ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர், அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் கள்ளக்காதலில் இருந்து வந்துள்ளார். இவர்களின் பழக்கம் குறித்து அறிந்த அந்தப் பெண்ணின் குடும்பத்தினர், பலமுறை சரவணனை கண்டித்து எச்சரித்துள்ளனர். உறவினர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி சரவணன் தனது தொடர்பை தொடர்ந்தது, இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட நாட்களாகவே புகைந்து கொண்டிருந்த மோதலை தீவிரப்படுத்தியுள்ளது.
சம்பவத்தன்று இது தொடர்பாக மீண்டும் வாக்குவாதம் வெடிக்க, அது கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற அந்தப் பெண்ணின் கணவர், மகன் மற்றும் உறவினர்கள் ஒன்று சேர்ந்து சரவணனை தாக்கியுள்ளனர். அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், பலத்த காயமடைந்த சரவணன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
பின்னர், சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த காவல் துறையினர், உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த கணவர் மற்றும் மகன் உள்ளிட்ட 3 பேரை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.



