நடிகர் தனுஷ் இயக்கி, நடித்து, நித்யா மேனன், சத்யராஜ், அருண் விஜய் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்த ‘இட்லி கடை’ திரைப்படம் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்கள் வந்தபோதும், படக்குழுவினர் படத்தின் வெற்றியை தற்போது கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் தனுஷ் மற்றும் அவரது குடும்பத்தினர், தங்கள் குலதெய்வக் கோவிலில் தரிசனம் செய்தது தேனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, படம் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஆண்டிபட்டி அருகே உள்ள முத்துரங்காபுரம் கிராமத்தில் இருக்கும் தங்கள் குலதெய்வமான கஸ்தூரி அம்மாள் மங்கம்மாள் கோவிலுக்கு வந்து தனுஷ் வழிபட்டுச் சென்றார். தற்போது படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், மீண்டும் அவரது குடும்பத்தினர் கோவிலுக்கு வருகை தந்தனர்.
இயக்குநரும் தனுஷின் தந்தையுமான கஸ்தூரிராஜா, அவருடைய மனைவி விஜயலட்சுமி, நடிகர் தனுஷ், அவரது மகன்கள் யாத்ரா, லிங்கா மற்றும் செல்வராகவன் குடும்பத்தினர் அனைவரும் முத்துரங்காபுரம் கிராமத்தில் உள்ள அந்தக் குலதெய்வக் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். கடந்த சில நாட்களாக மதுரையில் நடைபெற்ற ‘இட்லி கடை’ இசை வெளியீட்டு விழா உள்ளிட்ட பல விழாக்களில் தனுஷ் பங்கேற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகர் தனுஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் வருகைக்காக, காலை 10 மணி முதலே கோவிலுக்கு அருகே கேரவன் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, காலை முதலே தனுஷை காண ஆவலுடன் காத்திருந்த கிராம மக்களும் ரசிகர்களும், அவர் குடும்பத்தினருடன் மாலை 3 மணியளவில் கோவிலுக்கு வந்ததைக் கண்டு ஆர்வத்துடன் வரவேற்றனர்.
ஆனால், கிராம மக்கள் தனுஷை பார்க்கவோ, பேசவோ, அவருடன் ஒரு செல்ஃபி எடுக்கவோ முயன்றபோது, நடிகர் தனுஷின் பவுன்சர்கள் அவர்களை தடுத்து நிறுத்தியதால், மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். சாமி கும்பிட்டு முடித்ததும், தனுஷ் குடும்பத்தினர் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
சென்னையில் பார்க்க முடியாவிட்டாலும், சொந்த ஊருக்கு வரும்போது தனுஷை பார்க்கலாம் என்று நீண்ட நேரம் காத்திருந்த அப்பகுதி மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். “அடிக்கடி எங்கள் ஊருக்கு வரும் தனுஷ், மக்களைச் சந்திப்பது கூட இல்லை” என்று அப்பகுதி மக்கள் வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், சினிமா துறைக்குச் சென்ற பிறகு தனுஷ் குடும்பத்தினர் கிராம மக்களை மதிப்பதில்லை என்றும், ஒருவித தலைக்கனத்துடனேயே பவுன்சர்கள் புடைசூழ வலம் வருவதாகவும் கிராம மக்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.