இன்றைய வாழ்க்கை முறையில், இயற்கையின் வரப்பிரசாதம் தான் சீதாப்பழம். குளிர்காலத்தில் சந்தையில் முக்கியமாகக் கிடைக்கும் இந்தப் பழம், சுவைக்கு மட்டுமின்றி, அதன் ஊட்டச்சத்துக்கும் பிரபலமானது.
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், சீதாப்பழத்தில் வைட்டமின் சி, பாஸ்பரஸ், பொட்டாசியம், தியாமின், ரைபோஃப்ளேவின் உள்ளிட்ட பலவகைத் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளது. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள், உடலில் உள்ள நச்சுகளை நீக்கி, செல்களின் சீரான வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி சாப்பிடும் ஒரு பழமாகும்.
சீதாப்பழம் அதிக ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருந்தாலும், இதில் சில பிரச்சனைகளும் உள்ளது. சிலர் சீதாப்பழத்தை சாப்பிட்டவுடன் தோல் எரிச்சல், அரிப்பு, ஒவ்வாமை போன்ற அறிகுறிகள் தோன்றலாம். இதில் அதிகமாக உள்ள நார்ச்சத்து சிலருக்கு வயிற்றுப் பூச்சி, வலி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை உருவாக்கும்.
அதேபோல், சீதாப்பழத்தின் விதைகள் நச்சுத்தன்மை கொண்டவை. அதை தவறுதலாக விழுங்கினால், மோசமான செரிமானக் கோளாறுகள், நரம்பியல் பாதிப்புகள் ஏற்படலாம். இதில் உள்ள அனோனாசின் எனும் ஒரு வேதிப்பொருள், சீரற்ற நரம்பியல் செயல்பாடுகளுக்கு காரணமாக முடியும். குறிப்பாக மருந்து சாப்பிட்டு வருபவர்கள் இதை கவனிக்க வேண்டும்.
நீரிழிவு நோயாளிகள், உடல் பருமன் இருப்பவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகள் சீதாப்பழத்தை மிதமான அளவில் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். தினசரி சாப்பிடுவதாக இருந்தால், மருத்துவரின் ஆலோசனையை பெறுவது சிறந்தது. குளிர் காலங்களில் இந்த பழம் சாப்பிடும்போது சிலருக்கு சளி, இருமல், மற்றும் மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே, உடல்நிலையில் ஏற்கும் அளவுக்கு மட்டுமே எடுத்துக் கொள்வது நல்லது.