நடிகை காஜல் அகர்வால் மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். காஜல் ஒரு பயங்கரமான சாலை விபத்தில் சிக்கி பெரும் காயமடைந்ததாகவும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாகவும் கூறி ஒரு பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் அவரின் ரசிகர்களும் நலம் விரும்பிகளும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.. இந்த நிலையில் நடிகை காஜல் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்..
காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து ஒரு நீண்ட குறிப்பைப் பகிர்ந்துள்ளார். “நான் ஒரு விபத்தில் சிக்கியதாகக் கூறும் சில ஆதாரமற்ற செய்திகளைக் கண்டேன்.. நேர்மையாகச் சொன்னால், அது முற்றிலும் பொய்யானது என்பதால் அது மிகவும் வேடிக்கையானது.
கடவுளின் அருளால், நான் முற்றிலும் நலமாக இருக்கிறேன், பாதுகாப்பாக இருக்கிறேன், மிகவும் நன்றாக இருக்கிறேன் என்பதை உங்கள் அனைவருக்கும் உறுதியளிக்க விரும்புகிறேன். இதுபோன்ற தவறான செய்திகளை நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என்று நான் தயவுசெய்து கேட்டுக்கொள்கிறேன். அதற்கு பதிலாக நேர்மறை மற்றும் உண்மையின் மீது கவனம் செலுத்துவோம்”. என்று பதிவிட்டுள்ளார்..
காஜல் அகர்வால் கடைசியாக சல்மான் கான் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த சிக்கந்தர் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபிஸிலும் படு தோல்வி அடைந்தது.. இந்தப் படத்தில் பிரதீக் பப்பர் மற்றும் சஞ்சய் கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.
மேலும் ஜூலை மாதம் வெளியான தெலுங்கு பக்தி படமான கண்ணப்பா படத்திலும் காஜல் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். இந்தப் படம் செப்டம்பர் 4, 2025 அன்று OTT தளமான அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. இது தவிர, மேலும் பல படங்களை காஜல் தன் கைவசம் வைத்திருக்கிறார்.. கமல்ஹாசனின் இந்தியன் 3 படமும், மற்றொன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான நிதேஷ் திவாரியின் ராமாயணம் ஆகிய படங்களில் காஜல் நடிக்க உள்ளார்..
பிரம்மாண்டமாக உருவாகி வரும் ராமாயணம் படத்தில் ராவணனாக நடிக்கும் யாஷுக்கு ஜோடியாக அதாவது மண்டோதரியாக காஜல் அகர்வால் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும் நடிக்கின்றனர், முதல் பாகம் 2026 தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.