அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக நடத்திய தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்பு, தெற்கு ஈரானில் உள்ள மினாப் நகரில் இருக்கும் ஒரு சிறுமிகள் தொடக்கப்பள்ளியை தவறாக “சட்டபூர்வமான ராணுவ இலக்கு” என்று அடையாளம் காட்டியிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் 7 முதல் 12 வயதுக்குள் இருக்கும் குறைந்தது 160 பள்ளி மாணவிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. அந்த விசாரணையில், அந்த பள்ளி செயல்பட்டு வந்த இடம், ஒருகாலத்தில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தளமாக இருந்ததாக கூறப்படுகிறது.. இந்த பழைய தகவல்தான் AI அமைப்பை அந்த இடத்தை ராணுவ இலக்காக தவறாக அடையாளம் காணச் செய்திருக்கலாம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அந்த பள்ளிக்குச் சமீபத்தில் இருந்த ஒரு ராணுவ வளாகத்தையே AI அமைப்பு தாக்குதல் இலக்காக தேர்வு செய்திருக்கலாம். ஆனால் கணக்கீட்டில் ஏற்பட்ட ஒரு பெரிய தவறினால் அமெரிக்க ஏவுகணை நேரடியாக பள்ளி மீது விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
மினாப் நகரில் உள்ள பள்ளி எப்படி தாக்கப்பட்டது?
அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து, ஈரானில் பல்வேறு இடங்களில் தாக்குதலில் நடத்தினர்.. மினாப் நகரில் உள்ள ஷஜரே தாயெபெ சிறுமிகள் பள்ளி, பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானில் மேற்கொண்ட தாக்குதல்களில் முதலில் தாக்கப்பட்ட இடங்களில் ஒன்றாக இருந்தது. ஈரானின் அரசு ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, இந்த தாக்குதல் பள்ளி நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில் நடந்தது. அந்த நேரத்தில் 7 முதல் 12 வயதுக்குள் இருக்கும் நூற்றுக்கணக்கான மாணவிகள் பள்ளியில் இருந்தனர்.
இந்த தாக்குதலால் பள்ளி வளாகம் முழுவதும் முற்றிலும் அழிந்தது. ஈரானிய ஊடகங்கள் தெரிவித்ததன்படி, 180-க்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவயது பள்ளி மாணவிகள் தான்.
இந்த சம்பவம் குறித்து உலகளவில் கடும் கண்டனம் எழுந்தது. அதன்பின்னர் அமெரிக்க அதிகாரிகள் விளக்கம் அளித்தபோது, அமெரிக்கா பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற பொதுமக்கள் பயன்பாட்டு இடங்களை திட்டமிட்டு தாக்காது என்று தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் கூறினர். பின்னர் சில அமெரிக்க அதிகாரிகள், இந்த தாக்குதல் அமெரிக்க ராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம் என்று ஒப்புக்கொண்டனர். இருப்பினும் விசாரணையின் இறுதி முடிவு இன்னும் வெளியாகவில்லை.
AI அமைப்பு தவறாக பள்ளியை இலக்காக தேர்வு செய்ததா?
சமீப ஆண்டுகளில் நவீன போரில் இலக்குகளை அடையாளம் காண செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது என்று AI நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.. ஆனால் அதில் சில ஆபத்துகளும் உள்ளன. குறிப்பாக தவறான அல்லது பழைய தகவல்கள் AI அமைப்பில் வழங்கப்பட்டால், அது தவறான முடிவுகளை எடுக்கக்கூடும். மினாப் பள்ளி சம்பவத்திலும் அப்படியான ஒன்று நடந்திருக்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.
ஒரு இடத்தில் ராணுவ தளம் இருப்பதாக AI அமைப்பில் தரவு இருந்தால், அந்த தகவலை அடிப்படையாகக் கொண்டு அந்த இடத்தை இலக்காக தேர்வு செய்யலாம். ஆனால் அந்த இடத்தில் தற்போது ஒரு பள்ளி செயல்பட்டு கொண்டிருந்தாலும், அந்த புதிய தகவல் AI அமைப்பில் இல்லாமல் இருக்கலாம். மினாப் நகரில் உள்ள அந்த பள்ளி கடந்த சில ஆண்டுகளாக அங்கே செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் ஒரு சாத்தியமான காரணமாக, அந்த பள்ளியைச் சுற்றியுள்ள கட்டிடங்களை AI அமைப்பு தவறாக மதிப்பீடு செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. பல நேரங்களில் ராணுவ கட்டிடங்களும் பொதுமக்கள் கட்டிடங்களும் ஒரே பகுதியிலேயே இருக்கும். அந்த முழு வளாகத்தையும் AI அமைப்பு ராணுவ பகுதி என்று தவறாக புரிந்துகொண்டிருந்தால், பள்ளியையும் ராணுவ அமைப்பின் ஒரு பகுதியாக கருதி இலக்காக தேர்வு செய்திருக்கலாம்.
இலக்குகளை தேர்வு செய்வதில் முழுமையாக AI அமைப்புகளை மட்டுமே நம்புவது மிகவும் ஆபத்தானது என்றும். மனிதர்கள் நேரடியாக சரிபார்க்கும் செயல்முறையை நீக்கிவிட்டால், AI அமைப்புகள் பெரிய தவறுகளை செய்யும் வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்..
போரில் AI பயன்பாட்டுக்கு மினாப் பள்ளி சம்பவம் ஒரு எச்சரிக்கை
மினாப் பள்ளி சம்பவம் எவ்வாறு நடந்தது என்பது முழுமையாக விசாரணைக்கு பிறகே தெரியும். ஆனால் இந்த சம்பவம், போரில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் இருக்கும் ஆபத்துகளை நினைவூட்டும் ஒரு கடுமையான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
AI அமைப்புகள் மிகவும் மேம்பட்டதாக இருந்தாலும், அவை எடுக்கும் முடிவுகள் அனைத்தும் அல்காரிதம், தரவு மற்றும் மெஷின் லெர்னிங் ஆகியவற்றின் அடிப்படையில் தான் அமையும். அதனால் தரவு தவறாக இருந்தாலோ அல்லது கணக்கீட்டில் சிறிய பிழை ஏற்பட்டாலோ, மினாப் பள்ளி சம்பவம் போன்ற பெரிய விபத்துகள் ஏற்படக்கூடும்.
இதனால், போரில் AI அமைப்புகளுக்கு முழுமையான சுதந்திரம் வழங்க வேண்டுமா? உயிர்-மரணம் தொடர்பான முடிவுகளை இயந்திரங்கள் எடுத்துக்கொள்ளலாமா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
இருப்பினும், மினாப் பள்ளி மீது நடந்த ஏவுகணை தாக்குதல் மனிதர்களின் திட்டமிட்ட முடிவா அல்லது இயந்திரத்தில் ஏற்பட்ட பெரிய பிழையா என்பது தற்போது தெளிவாக தெரியவில்லை. பொதுவாக போர் சூழலில் பொதுமக்கள் பல நேரங்களில் அறியாமலேயே பலியாகும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.
குறிப்பாக, அமெரிக்கா சமீபத்தில் Anthropic மற்றும் OpenAI போன்ற பெரிய AI நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து, ராணுவ நடவடிக்கைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பெரிய அளவில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
மேலும், காசா போரின் போது ஆயிரக்கணக்கான இலக்குகளை பட்டியலிடுவதற்காக இஸ்ரேல் “Lavender” AI அமைப்பை பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அந்த அமைப்பு பல நேரங்களில் தவறான இலக்குகளை தேர்வு செய்ததாக தகவல் வெளியானதால் அதன் துல்லியம் பற்றியும் கேள்விகள் எழுந்துள்ளன.



