சென்னையை ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், வள்ளலார் நகர், 6வது தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் (43). இவர் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இவர், தனது வீட்டின் அருகே இருந்தபோது, இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென அவரை வழிமறித்து தாக்கியுள்ளனர்.
இந்த கொடூர தாக்குதலில் பிரகாஷுக்கு வலது மற்றும் இடது கை மணிக்கட்டுகள், பின்பக்க கழுத்து ஆகிய பகுதிகளில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருமுல்லைவாயில் காவல்துறையினர், பலத்த காயமடைந்த பிரகாஷை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதையடுத்து, காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இந்த தாக்குதலுக்கான காரணம் தெரியவந்துள்ளது. ஆவடி அடுத்த ஆரிக்கம்பேடு பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரின் மனைவியுடன், காயமடைந்த கார் ஓட்டுநர் பிரகாஷ் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இது ராஜசேகருக்கு தெரிய வந்த நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக ஏற்பட்ட ஆத்திரத்தில், ராஜசேகரின் தூண்டுதலின் பேரில் இந்தக் கொலை வெறித் தாக்குதல் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இந்த தாக்குதலில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகள் உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இந்தக் கள்ளத்தொடர்பு விவகாரத்தால் ஏற்பட்ட மோதல் மற்றும் தாக்குதலுக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது குறித்துக் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



