இந்தியாவில் தினமும் கோடிக்கணக்கானோர் ரயில்களில் பயணிக்கின்றனர். ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ரயில்வே விதிமுறைகள் பற்றிய தெளிவான அறிவும், நுணுக்கமான தகவல்களும் இல்லை. குறிப்பாக, ஒருவர் டிக்கெட் வாங்கிய பிறகு ரயிலை தவற விட்டால் அந்த டிக்கெட் பயனற்றதாகவே போய்விடும் என பலர் எண்ணுகிறார்கள். இதனால், சிலர் புது டிக்கெட் வாங்கும் அளவிற்கு நேரம், பணம் இரண்டையும் வீணாக்குகின்றனர். ஆனால் இந்திய ரயில்வே வழங்கும் சில வசதிகள் இந்த பிரச்சனையில் இருந்து நம்மை காக்கின்றன என்பது பலருக்குத் தெரியாத உண்மை.
பயணிகள் பொதுப்பெட்டிக்கான (unreserved/general) டிக்கெட் வாங்கி வைத்திருந்தால், அவர்கள் ரயிலை தவற விட்டாலும், அதே டிக்கெட்டுடன் வேறு எந்த ரயிலின் பொதுப்பெட்டியிலும் பயணிக்கலாம். இது ரயில்வே விதிமுறையின்படி செல்லுபடியாகும்.
குறுகிய தூர பயண டிக்கெட்டுகளுக்கு ரயில் புறப்பட்ட 3 மணி நேரத்துக்குள்ளும், நீண்ட தூர பயண டிக்கெட்டுகளுக்கு ரயில் புறப்பட்ட 24 மணி நேரத்துக்குள்ளும் பயணிக்கலாம். இந்த நேரத்திற்குள் நீங்கள் மற்றொரு பொதுப்பெட்டியில் பயணிக்கலாம். இதற்காக எந்தவொரு கூடுதல் கட்டணமும் தேவைப்படாது. ஆனால், இந்த வசதி முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு கிடையாது என்பதை பயணிகள் கவனிக்க வேண்டும்.
முன்பதிவு செய்யப்பட்ட (reserved) டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள், அவர்கள் ரயிலை தவற விட்டால், அந்த டிக்கெட் பயனற்றதாகி விடுவதில்லை. எனினும், அவர்கள் அதைப் பயன்படுத்தி பயணம் செய்ய முடியாது. இதற்கான மாற்று வழியாக, ரயில்வே துறையின் Ticket Deposit Receipt (TDR) எனப்படும் நடைமுறை உள்ளடக்கியுள்ளது.
பயணிக்க தவறிய பயணிகள், ரயில் புறப்பட்ட 4 மணி நேரத்துக்குள் TDR தாக்கல் செய்ய வேண்டும். இதை IRCTC இணையதளம் அல்லது IRCTC செயலி மூலமாக ஆன்லைனில் செய்துவிடலாம். சரியான முறையில் மற்றும் காலத்துக்குள் TDR தாக்கல் செய்தால், பயணியின் டிக்கெட் தொகை ரயில்வேயால் திருப்பி அளிக்கப்படும். TDR வசதி பொது டிக்கெட்டுகளுக்கு பொருந்தாது என்பது முக்கியமாக குறிப்பிடத்தக்கது. இது முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கே மட்டுமே வழங்கப்படும்.
சிலர் ஆன்லைனில் அல்லாமல், ரயில்வே நிலைய கவுண்டரில் நேரில் டிக்கெட் வாங்கி இருக்கலாம். அவர்களும், ரயிலை தவற விட்டிருந்தால், அந்த ரயில்வே நிலையத்திற்கே சென்று TDR தாக்கல் செய்யலாம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். TDR தாக்கல் செய்யும் போது, உங்கள் பயண விவரங்கள், PNR எண், ரயில் எண் போன்றவை கையிலிருக்க வேண்டும்.
Read more: ரூ.1.5 லட்சம் வரை வருமான வரி சேமிக்கலாம்.. எப்படி தெரியுமா? முழு விவரம் இதோ..