கோவிலுக்குச் சென்று இறைவனை தரிசிக்கும் செயலுக்கு பின், ஆலயத்தையே சுற்றி வலம் வருவது, ஆழமான ஆன்மிக செயலாகத் திகழ்கிறது. பலர் அதை ஒரு பழக்கத்துக்காக மட்டும் செய்வதாக நினைத்தாலும், அதில் மறைந்திருக்கும் ஆழமான அர்த்தங்களைப் புரிந்து கொள்ளும் போது, இந்த நடை, மனதில் ஏற்படும் மாற்றத்தையும், வாழ்வில் ஏற்படும் நலன்களையும் நம்பத் தக்கதாகவே தெரிகிறது. ஒவ்வொரு சுற்றும் ஒரு பிரார்த்தனையாக மாறுகிறது. ஒவ்வொரு அடியிலும் பக்தி நிறைந்த பயணமாக அந்த தரிசன அனுபவம் நிலைபெறுகிறது.
ஆன்மிக சாஸ்திரங்களின் படி, பிரதட்சணத்தின் எண்ணிக்கைகள் வெறும் எண்ணிக்கைகள் அல்ல; அவை தனித்தனி பலன்களை கொண்டவை. எடுத்துக்காட்டாக, ஒருமுறை வலம் வந்தால் தடைகள் நீங்கும் என நம்பப்படுகிறது. மூன்று முறை வலம் வருவது அரசியல் செல்வாக்கு, பண வளம், லட்சுமி கடாட்சம் போன்றவற்றை ஈர்க்கும் என்று கூறப்படுகிறது. ஐந்து முறை வலம் வருவது வாழ்க்கையில் நிதி சுதந்திரத்தை ஏற்படுத்தும். ஆறு முறை பிரதட்சணம் எதிரிகளை எதிர்கொள்ளும் துணிச்சலை வழங்கும்.
ஏழு முறை வலம் வருவது, ஒரு நபர் மனதில் வைத்த காரியம் நிறைவேறும் வழியை உருவாக்கும் என நம்பப்படுகிறது. அதே நேரத்தில், ஒன்பது முறை வலம் வருவதால் ஜாதகத் தோஷங்கள் நீங்கி, கிரகப் பிரச்சனைகள் சாந்தமாகும் என்பது சாஸ்திரங்களின் அடிப்படை கூறாகும்.
பெரிய எண்ணிக்கைகளுக்கும் தனிச்சிறப்புகள் உண்டு. 11 முறை வலம் வருவது ஆயுள் விருத்திக்காகச் செய்யப்படுகிறது. 13 முறை என்பது மனத்தில் வைக்கப்படும் வேண்டுதல்களின் நிறைவேற்றத்திற்கு வழிவகுக்கும். 21 முறை கல்வி வளர்ச்சிக்கும், 23 முறை சுகமான வாழ்க்கைக்கும் உதவுவதாக நம்பப்படுகிறது. அதைவிட ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் 108 முறை பிரதட்சணம் குழந்தை பாக்கியம் கிடைக்க உதவும். மேலும், மிக அபூர்வமாக 208 முறை வலம் வருவது, யாகங்களால் பெறப்படும் பலனை விட மேலானதாக கருதப்படுகிறது.