யூபிஐ வழியாக மொபைல் செயலிகள் மூலம் பணம் அனுப்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரும் ஜூலை 15ஆம் தேதி முதல், யூபிஐ பரிவர்த்தனை தோல்வியடைந்தாலோ அல்லது தவறான UPI ID-க்கு பணம் அனுப்பப்பட்டாலோ, அந்த தொகை உடனடியாகவே வாடிக்கையாளரின் கணக்கில் திரும்பக் கிடைக்கும் என NPCI தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழலில், யூபிஐ பரிவர்த்தனைகள் தோல்வியடைந்தால், பணம் திரும்ப வந்து சேர பல மணி நேரம் அல்லது நாட்கள் எடுப்பது வழக்கமாக இருந்தது. ஆனால் புதிய விதிமுறையின் கீழ், பணம் செலுத்தப்படாமல், கணக்கிலிருந்து கழிக்கப்பட்டால் 15 வினாடிகளுக்குள் அந்த தொகை திருப்பி வழங்கப்படும் என NPCI கூறியுள்ளது.
அவசரத்தில் தவறுதலாக வேறு யுபிஐ ஐடிக்கு பணம் அனுப்பிவிட்டால் இனி அந்த பணத்தை உங்கள் வங்கி மூலம் திரும்ப பெற முடியும்! புதிய வழிகாட்டுதலின்படி, NPCI-யின் ஒப்புதலுக்காக காத்திருக்காமல், வங்கிகள் இப்போது நிராகரிக்கப்பட்ட ‘சார்ஜ்பேக்’ (Chargeback) கோரிக்கைகளை அங்கீகரிக்க முடியும். மோசடி நடந்தாலோ, பரிவர்த்தனை தோல்வியுற்றாலோ, அல்லது வணிகர் புகார்கள் போன்ற நிலைகளிலும் இது பொருந்தும்.
NPCI இன் புதிய வழிகாட்டுதல்களின் கீழ், முன் ஒப்புதல் தேவையில்லாமல், வங்கிகள் தவறாக நிராகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகளைத் தாங்களாகவே பரிசீலித்து, தீர்வு காண அனுமதிக்கப்படுகிறது. மேலும், பணம் அனுப்பும் வேகத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன், தற்போது 30 வினாடிகள் எடுத்துக் கொண்ட யூபிஐ பரிவர்த்தனைகள், 10 முதல் 15 வினாடிகளுக்குள் நிறைவு பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக, கடந்த மாதம் NPCI அனைத்து வங்கிகளுக்கும் மற்றும் யூபிஐ செயலிகளுக்கும் தேவையான தொழில்நுட்ப மேம்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தியது.
இந்த புதிய விதி, கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த நன்மையுடன் கூடியதாக அமைந்துள்ளது. வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு, நம்பிக்கை மற்றும் செயல்திறனை அதிகரிக்கும் இந்த மாற்றம், யூபிஐ பரிவர்த்தனையின் விரைவில் செயல்படுவதை உறுதி செய்யும் என NPCI தெரிவித்துள்ளது.
Read more: உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் இருக்கின்றன? எப்படி சரிபார்ப்பது? எப்படி பிளாக் செய்வது?



